நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புத் தோழர்களான ஸஹாபா பெருமக்களின்
காலத்திலிருந்து, இன்று வரை உள்ள மார்க்க அறிஞர்களிடையே
கருத்து வேறுபாடு இல்லாமல் இருந்துவரும் வணக்கவழிபாடுகளில்
‘ஜக்காத்’ தும் ஒன்றாகும். ஜக்காத்தின் அளவை எட்டி, ஒரு வருடம்வரை
நம் கைகளில் இருந்துவிட்ட செல்வங்களுக்கு வருடந்தோறும் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்கிற
கருத்தைத்தான் இஸ்லாத்தின் முதல் தலைமுறை மார்க்க அறிஞர்கள் கொண்டிருந்தனர். இன்று உள்ள
மார்க்க அறிஞர்களும் அதே
கருத்தைத்தான்
கொண்டுள்ளனர்.
இஸ்லாமியச் சட்டங்களைத் தொகுத்த
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலரும் இந்த சட்டத்தைப் பொருத்தவரை வருடந்தோறும் ஜக்காத் கொடுக்க
வேண்டும் என்கிற கருத்தில்தான் சட்டங்களைத்
தொகுத்தளித்துள்ளனர். இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான இந்த கடமையைச் செய்வதற்கு
ஆதாரம் கேட்பது, வருடந்தோறும் நோன்பு
நோற்பதற்கு ஆதாரம் கேட்பதற்கு
ஒப்பாகும். ஏனெனில் அருள்மறை குர்ஆனில் ரமலானில் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்;கிறதேயல்லாமல், வருடந்தோறும் ரமலானில் நோன்பு நோற்க
வேண்டும் என்று குறிப்பிடவில்லை. மேலும் ஜக்காத் என்னும் இந்த
கடமையை வருடந்தோறும் கொடுப்பதற்கு ஆதாரம் கேட்பது ஒருமுறைக்கு மேல் ஹஜ் செய்வதற்கு ஆதாரம்
கேட்பதற்கு ஒப்பாகும். ஹஜ் செய்வதற்கு
மக்காவிற்கு செல்வது முஸ்லிம்களின் மீது கடமையாகும் என்று அல்லாஹ் அருள்மறை குர்ஆனில்
குறிப்பிடுகிறானேத் தவிர, பலமுறை ஹஜ்செய்ய வேண்டும் என்று
குறிப்பிடவில்லை. அதுபோல அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களும் தங்களது வாழ்நாளில்
ஒருமுறைதான் ஹஜ் செய்திருக்கிறார்கள். இது மற்றும் இதுபோன்ற தெளிவான விஷயங்களுக்கு, ஆதாரம் கேட்பவர்களைப் பற்றி அருள்மறை குர்ஆனின் வசனம்
கீழ்க்கண்டவாறு சுட்டிக்காட்டுகின்றது.‘எவனொருவன் நேர்வழி இன்னது என்று
தனக்குத் தெளிவான பின்னரும்,
(அல்லாஹ்வின்)
இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு, நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம், அதுவோ, சென்றடையும்
இடங்களில் மிகக் கெட்டதாகும்.’
(அத்தியாயம்
4 ஸுரத்துந்நிஸா 115 வது வசனம்).
ஒருவர், எத்தனைச் சிறந்த மார்க்க அறிஞராக இருந்தாலும், அருள்மறை குர்ஆனையும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையையும் – அண்ணல் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புத்தோழர்களும், அவர்களுக்குப் பின் வந்த மார்க்க அறிஞர்களும் விளங்கிக் கொண்டதைபோல்
விளங்கிக் கொள்ள வேண்டுமேத் தவிர,
தனது
அறிவுக்கு எட்டிய விதத்தில் அருள்மறை
குர்ஆனையும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையையும் விளங்குவது சரியான நிலைப்பாடு
அல்ல. முந்தைய மார்க்க
அறிஞர்கள்
விளங்கிய கருத்தை ஒதுக்கித் தள்ளுவது மேலே குறிப்பிடப்பட்ட அருள்மறை வசனம் சொல்வது போல் பிரிவினைக்கும், தவறான வழிகாட்டுதலுக்கும், அழிவுக்கும்தான் வழிவகுக்கும். அல்லாஹ்வின் தூதர் அண்ணல்
நபி
ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக முஆவியா
பின் அபூஸூப்யான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.‘நிச்சயமாக உங்களுக்கு முன்னால்
இருந்த வேதம் கொடுக்கப்பட்டவர்கள் 72 பிரிவுகளாக பிரிந்தனர்.
இந்த சமூகம் 73 ஆக பிரியும். அதில் 72 நரகம் செல்லும். ஒன்று சுவனம் செல்லும். அது ‘அல்-ஜமாஅ’ (கூட்டமைப்பு) ஆகும்’ (ஆதார நூல்: ஸூனன் அபூதாவூத்
– 4580, ஷஹீஹ் ஸூனன் அபீதாவூத் – 4607).
‘ஒருநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடாத்திவிட்டு, எங்களை நோக்கி, ஒரு
உருக்கமான உரையை நிகழ்த்தினார்கள். கண்கள்
கண்ணீர் சிந்தின. உள்ளங்கள் பயப்பட்டன. அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! இது இறுதி உரை
போன்றிருக்கிறதே. எங்களுக்கு என்ன உபதேசம்
செய்கிறீர்கள்? என்று கேட்டார். ‘அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்!
(உங்களுடைய தலைவருக்கு) கட்டுப்படுங்கள்! அவர் அபிஷீனிய அடிமையாக இருப்பினும் சரியே!
எனக்குப்பின் யார் வாழ்கிறாரோ,
அவர் அதிகமான கருத்து
வேறுபாடுகளைக் காண்பார். எனவே எனது வழிமுறையையும், நேர்வழி நடந்த எனது கலீபாக்களின்
வழிமுறையையும் உங்கள் கடைவாய்ப் பற்களால் பற்றிப்பிடித்துக்
கொள்ளுங்கள். மேலும் நூதனமான விஷயங்களைப் பற்றி நான் உங்களுக்கு எச்சரிக்கைச் செய்கிறேன். நூதனமாக
விஷயங்கள் யாவும் ‘பித்ஆ’ வாகும். ‘பித்அத்’ துக்கள் அனைத்தும் வழிகேடுகளாகும்’ என
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர் இர்பால் (ரலி) அவர்கள். ஆதார நூல்: ஸூனன் அபீதாவூத் – 4490 – ஷஹீஹ் ஸூனன் அபீதாவூத் – 4607).மேற்படி ஹதீஸ்களில் அல்லாஹ்வின் தூதர் அண்ணல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியபடி ‘சுவர்க்கம் செல்லும் பிரிவில் நானும் என்னைப் பின்பற்றிய என்னுடைய ஸஹாபா
பெருமக்களும் காட்டித்தந்த வழியைப் பின்பற்றுபவர்களும்
உள்ளடங்குவர்’ – என்கிற ஹதீஸில் ‘ஜமாத்’ அல்லது ‘கூட்டமைப்பு’ என்று
தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். தன்னையும், தன்னைப் பின்பற்றிய கலீபாக்களின்
வழிமுறையையும் பின்பற்றுமாறு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள். குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிள் அடிப்படையில் முதல் தலைமுறை ஸஹாபாக்கள்
பின்பற்றியதை, சரியான முறையில் தொடராத பிந்திய
தலைமுறையின் செயல்பாடுகளே ‘பித்அத்’ கள் உருவாக அடிப்படையான காரணமாகும். உதாரணத்திற்கு கீழே
குறிப்பிடப்பட்ட ஹதீஸில்
சுட்டிக்காட்டியபடி
‘நிச்சயமாக அல்லாஹ்வின்
கரம் ‘ஜமாஅத்’ தின் மீதே இருக்கிறது’. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி
ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பரில் வைத்து மக்களுக்கு
உரையாற்றும்போது, ‘எனக்குப் பிறகு தீமைகளும், குழப்பங்களும் அதிகரிக்கும்;. யாராவது ‘ஜமாஅத்’ ஐ விட்டுப் பிரிந்து செல்வதைக் கண்டால் அல்லது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய சமுதாயத்தின்
காரியத்தைப் பிரிக்க விரும்பினால், அவர்
யாராக இருந்தாலும், அவரைக் கொல்லுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ்வின் கரம்
‘ஜமாஅத்’ தின் மீதே இருக்கிறது. யார் ‘ஜமாஅத்’ ஐ
விட்டும் பிரிகிறானோ, அவனோடு ஷைத்தானும்
ஓடிக்கொண்டிருக்கிறான்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அர்ஃபஜா இப்னு ஸூரைஹ்(ரலி) ஆதார
நூல்: ஸஹீஹ் ஸூனன் நஸயீ – 4032).தொழுகையைக் கூட்டாகத்
தொழுவதால் ஏற்படக் கூடிய நன்மைகளை அறிவிக்கக்கூடிய ஹதீஸ்கள் பல உள்ளன.
‘தனியேத் தொழுபவருடையத்
தொழுகையை விட கூட்டாகத் தொழும் தொழுகை 25 அந்தஸ்துகள் சிறந்தவை. இரவில் உள்ள மலக்குகளும், பகலில் உள்ள மலக்குகளும் ஸுப்ஹுத் தொழுகையின்
போது ஒன்று கூடுகின்றனர்’ என நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு ஆதார
நூல்: புஹாரி – 241).மேலே சுட்டிக்காட்டப்பட்டத் ஹதீஸைப் போன்று
தொழுகைகளை கூட்டாகத் தொழுவதால் நன்மைகள்
அதிகம் என பல ஹதீஸ்கள் அறிவித்தாலும், கீழ்க்காணும்
ஹதீஸில் குறிப்பிடப்பட்ட ரண்டு
ரக்அத் (தஹ்யத்துல் மஸ்ஜித்) தொழுகை தனித்துத் தொழக்கூடியத் தொழுகையேத் தவிர, கூட்டாகத் தொழக்கூடியத் தொழுகை அல்ல. இந்த இரண்டு ரக்அத் (தஹ்யத்துல்
மஸ்ஜித்) தொழுகை கூட்டாகத் தொழக்கூடியத் தொழுகை அல்ல என்பதில் மார்க்க அறிஞர்கள் அனைவரும்
ஒருமித்தக் கருத்தைக்
கொண்டுள்ளனர்.
‘உங்களில் யாராகிலும்
பள்ளிவாசலுக்குள் நுழைந்தால், இரண்டு ரக்அத்துகள் தொழுகிறவரை உட்கார
வேண்டாம்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹுஆதார நூல்: புஹாரி – 147). மேலும்
இன்று அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி
ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளைக்
கொண்டாடுகிறவர்கள், அச்செயலைச் செய்வதற்கு, கீழக்காணும் அருள்மறை குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக்
காட்டுகிறார்கள்:‘இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான்.
மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர்.
முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.’ (அத்தியாயம் 33 ஸூரத்துல் அஹ்ஜாப் – 56வது வசனம்)
இங்கு
எழும் கேள்வி என்னவெனில், அல்லாஹ்வின் தூதர் அண்ணல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களும், அவர்களின்
அன்புத்தோழர்களும் மேற்கண்ட வசனத்தை இவ்வாறு நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களுக்குப்
பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் விளங்கியது போல்)தான் விளங்கிக் கொண்டார்களா? ஆம் எனில், இன்று
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது போல், அவர்கள் (ஸஹாபா
பெருமக்கள்) ஏன் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறந்த நாள்
கொண்டாடவில்லை? அவர்கள் அவ்வாறு பிறந்த
நாள் கொண்டாடவில்லை எனில், இன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறந்த
நாள் கொண்டாடுபவர்கள் அருள்மறை குர்ஆனை விளங்கிக் கொண்டதைப்போல், நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புத்தோழர்கள் அருள்மறை குர்ஆனை
விளங்கவில்லை (அல்லாஹ் பாதுகாப்பானாக) என்று அர்த்தம் ஆகிவிடுமா? நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து 400 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்தை ஆண்ட ஃபாத்திமித் ஸித்தி ஆட்சி
காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு ஆரம்பிக்கப்பிட்ட
இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை,
முந்தைய
தலைமுறை மார்க்க அறிஞர்களின் கருத்துக்கு
முரணானது என்பதால் அதனை நாம் சரியானது என்று ஏற்றுக் கொள்ள முடியாது.ஒரு வருடம் நிறைவுற்ற
செல்வங்களின் மீது ‘ஜக்காத்’; கடமையாகும்!
இங்கு
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஜக்காத்
சம்பந்தமான பிரச்னையைப் பார்க்கும்போது, எல்லாம்
வல்ல அல்லாஹ் தொழுகையைப் பற்றிக்
குறிப்பிடக் கூடிய வசனங்கள் அனைத்திலும், ‘ஜக்காத்’
தைப்
பற்றியும் குறிப்பிடுகிறான்,
எப்போது? எப்படி? என்பது
பற்றிக் குறிப்பிடாமல்.
அருள்மறை
குர்ஆனின் 2வது அத்தியாயம் ஸூரத்துல்
பகராவின் 43வது வசனத்தில் அல்லாஹ்
குறிப்பிடுகிறான்:
‘தொழுகையைக்
கடைப்பிடியுங்கள், ஜகாத்தையும் (ஒழுங்காகக்)
கொடுத்து வாருங்கள், ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ
செய்யுங்கள்.’
இதே
கருத்தை வலியுறுத்தும் வசனங்கள் அருள்மறை
குர்ஆனில் பல இடங்களில் உள்ளன. மேலும் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களின் வாழ்விலும்
இதற்கான வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்
கூறினார்கள்.‘இஸ்லாம் ஐந்து தூண்களின்
மீது நிறுவப்பட்டிருக்கிறது. வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு ஒருவன்
இல்லை: முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின்
தூதர் என நம்புவதும், தொழுகையை நிலைநாட்டுவதும், ஜக்காத் கொடுப்பதும், ஹஜ் செய்வதும், ரமலானில்
நோன்பு நோற்பதும் ஆகும்’ (ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம்). அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி
ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல்
ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் பகுதிக்கு அனுப்பி
வைத்தபோது, ‘நிச்சயமாக நீங்கள் வேதம் கொடுக்கப்பட்ட
சமுதாயத்தினரிடம் செல்கிறீர்கள். நீங்கள் அவர்களைச் சென்றடைந்ததும், அவர்களிடம் வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்
ஒருவனே என்றும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் என்றும் சாட்சி பகருமாறு
கூறுங்கள். அவர்கள் உங்கள் கூற்றுக்கு கட்டுப்பட்டுவிட்டால், அல்லாஹ் ஐவேளைத் தொழுகையைக்
கடமையாக்கியிருக்கிறான்
என்றும்
கூறுங்கள். அதிலும் அவர்கள் உங்கள் கூற்றுக்குக் கட்டுப் பட்டுவிட்டால், அல்லாஹ்
அவர்கள் மீது ஜக்காத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்றும் ஜக்காத் செலுத்துபவர்களிடமிருந்து
(பணக்காரர்களிடமிருந்து)
ஜக்காத்தை
வசூலித்து, அவர்களில் ஜக்காத்தைப்
பெறத் தகுதியுள்ளவர்களுக்கு
(ஏழைகளுக்கு)
பங்கிடுங்கள். அதிலும் அவர்கள் கட்டுப்பட்டு விட்டால், அநீதம் இழைப்பதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுங்கள்
என்றும் கூறுங்கள். ஏனெனில் அநீதி
இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கும், அல்லாஹ்வுக்கும்
இடையில் எந்தவிதத் திரையும் இல்லை
என்பதையும் அவர்களுக்கு உணர்த்துங்கள்’ என்றும் அறிவுரை கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆதார
நூல்கள்: புஹாரி, முஸ்லிம்.)இதுபோன்ற
எண்ணற்ற அருள்மறை குர்ஆனின் கட்டளைகளை, அல்லாஹ்வின்
தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள்
காட்டித் தந்த விதத்தில், அவர்களின் அன்புத்
தோழர்கள் நமக்கு அறிவித்ததைக் கொண்டு நாம் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். ஜக்காத்
கொடுக்கப்பட வேண்டிய செல்வங்களின் அளவைப்
பற்றியும், அதன் கால வரையறையைப்
பற்றியும் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள்
அறிவித்த எண்ணற்ற ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. அவைகளில் ஒன்றுதான் கீழ்க்கண்ட
ஹதீஸ்:அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி
ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்ததாக அலி
இப்னு அபுதாலிப் ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள்
கூறினார்கள்: ’200 திர்ஹம்கள் (அதாவது 611.5 கிராம் எடை வெள்ளிக்குச் சமமானது) ஒரு வருடம் வரை உங்களிடம்
இருக்குமெனில், அதன்மீது 5 திர்ஹம்கள் ஜக்காத் செலுத்துவது உங்கள் மீது கடமையாகும்.
ஒரு வருடம் நிறைவடையும் வரை 20
தினார்கள்
மீது (அதாவது 87 கிராம் தங்கத்தின் எடைக்குச் சமமானது)
ஜக்காத் கடமையில்லை. ஒரு
வருடம்
நிறைவடைந்துவிட்டால் அதன்மீது ண தினார் ஜக்காத் கடமையாகும். எத்தனை அதிகமாகிறதோ அதுவும்
இதன்படியே கணக்கிடப்படல் வேண்டும். ஒரு வருடம் நிறைவடையும்வரை சொத்தின் மீது ஜக்காத்
கடமையில்லை’. (ஆதார நூல்: அபூதாவூத்) (‘இதன்படியே கணக்கிடல் வேண்டும்’ என்று கூறினார்களா – அல்லது – ‘நபி
ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கணக்கிட
கூறினார்கள்’ என்று அறிவித்தார்களா என்பது தெரியவில்லை – என அறிவிப்பாளர் தெரிவிக்கிறார்).‘எவரேனும் ஒருவர் ஜக்காத் கொடுக்கக் கூடிய அளவிற்கு
செல்வத்தை ஈட்டியிருந்தால், அல்லாஹ்வின் பார்வையில், ஒரு வருடம் நிறைவடையும்வரை அந்த செல்வத்தின்
மீது ஜக்காத் கடமையில்லை’ என
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி
ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு
அஸ்லம் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (ஆதார
நூல்: திர்மிதி.)ஐயூப், உபைதுல்லாஹ் இப்னு உமர், மேலும் நாஃபியைச் சார்ந்த மற்றும் பலர்
மேற்கண்ட இந்த ஹதீஸை அறிவிக்கின்றனர்.
மேலே
குறிப்பிட்ட ஹதீஸ்களிலிருந்தும்,
மார்க்க
அறிஞர்களின் கருத்துகளிலிருந்தும் ஒருவருடம் நிறைவுற்ற செல்வங்களின் மீது நிச்சயமாக ஜக்காத்
கடமையாகும் என்பது தெளிவாகிறது. எந்த ஒரு
நிபந்தனையுமின்றி, முந்தைய வருடம் ஜக்காத்
கொடுக்கப்பட்ட செல்வமாக
இருந்தாலும், ஒரு வருடம் நிறைவுற்ற செல்வத்தின் மீது
ஜக்காத் கடமையாகும்
என்பது
பொதுவான நியதியாகும். இதன் பொருள் என்னவெனில், முந்தைய
வருடம் ஜக்காத் கொடுக்கப்பட்டச்
செல்வமாக இருந்தாலும், அந்த செல்வம் மீண்டும் ஒரு வருடத்தைக் கடந்து
விட்டால், அந்த செல்வத்தின் மீதும்; ஜக்காத் கடமையாகும். இல்லை என்று மறுப்பவர்கள்தான், அவ்வாறு இல்லை என்பதற்கு குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் ஆதாரங்களைத் தர வேண்டும்.
மேலும் இங்கு
கொடுக்கப்பட்டிருக்கும் ஹதீஸ்களின் தொடர் சரியாக இல்லை என்று காரணம் கூறி, ஆதாரங்களை மறுக்கவும் முயல வேண்டாம். ஒருமுறை
ஜக்காத் கொடுக்கப்பட்டச்
செல்வத்தின்; மீது, மறுமுறை ஜக்காத் கொடுக்கப்பட வேண்டியதில்லை என்பதை
நிரூபிப்பதற்கு, அவ்வாறு மறுப்பவர்கள்தான் குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் ஆதாரங்களைத் தர வேண்டும்.
மேலும்
‘ஜக்காத் என்பது
செல்வங்களைத் தூய்மைப்படுத்துவதாகும்.
ஒருமுறை ஜக்காத் கொடுத்தாலே செல்வம் தூய்மையாகிவிடுகிறது.
மறுமுறையும் தூய்மைப்படுத்த வேண்டியதில்லை’ என
சிலர் வாதிடுவதுபோல் இந்த
பிரச்னைக்குத் ‘தர்க்க ரீதியான’ விவாதம் சரியான தீர்வு அல்ல. ஏனெனில் வல்ல அல்லாஹ் அருள்மறை
குர்ஆனில் கூறுகிறான்:
‘(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து
தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும்
தூய்மையாக்குவீராக!’ (அத்தியாயம் 9 ஸுரத்துத் தவ்பாவின் 103வது வசனத்தின் ஒரு பகுதி.)
தூய்மைப்படுத்துதல்
என்கிற வார்த்தை இங்கு
குறிப்பிடப்பட்டிருந்தாலும்,
சிலர்
கூறுவதுபோல் ‘செல்வங்களைத் தூய்மைப்படுத்துதல்’ என்கிற பொருள் அல்ல. மாறாக இந்த வசனத்தில்
அல்லாஹ் குறிப்பிடுவது ‘மனிதர்களின் உள்ளங்களில் உள்ள
கஞ்சத்தனத்தையும், பேராசையையும், ஏழைகளின் மீது இரக்கம் இல்லாத் தன்மையையும் தூய்மைப்படுத்துதல்’ என்று பொருளாகும். (இதற்கு விளக்கம் ஃபிக்ஹ் அல்-ஸுன்னா – 3வது பாகம் 2வது
பக்கத்தை பார்க்கவும்).
இதற்கு
விளக்கமாக கீழ்க்கண்ட ஹதீஸீம் அமைந்திப்பதைப் காணலாம்:
‘தமீம் குலத்தைச் சார்ந்த
மனிதர் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்டார்: ‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமானச்
செல்வமும்;, பெரிய குடும்பமும், பெரும் சொத்துக்களும் இருக்கின்றன. நான் எனது விருந்தாளிகளை மதிக்கும்
பண்புடன் இருக்கிறேன். நான் என்னுடைய வாழ்க்கையை எப்படி நடத்துவது? நான் என்னுடைய செல்வத்தை எப்படிச் செலவு
செய்வது என்று எனக்கு அறிவுரை கூறுங்கள்’ என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உங்களது
செல்வங்களிலிருந்து
ஜக்காத்தைச்
செலுத்துங்கள். ஜக்காத் தூய்மைப்படுத்தக் கூடியது என்பதால், அது உம்மைத் தூய்மைப்படுத்தும். உறவுகளிடம்
கருணையுடனும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டுக்காரர்களுக்கும், கையேந்துபவர்களுக்கும் உரியதை வழங்குங்கள். உங்கள் செல்வத்தில்
வீண்செலவு செய்யாதீர்’ என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் – ஆதார நூல்: முஸ்னத் அஹ்மத் – ஹதீஸ் எண்: 11945)
வருடம்தோறும்
சொத்துக்களின் மீது ஜக்காத் வழங்குதல்:
அல்லாஹ்வின்
தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“மூன்று விஷயங்களைச் செய்யும்
ஒருவர் ஈமானில் உறுதிகொண்டவராவார். அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவர், அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன்
வேறு இல்லை என்று நம்பிக்கை கொள்பவர், தனது செல்வங்களிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கொடுப்பவர்” .
(அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் இப்னு முஆவியா அல் காதிரி – ஆதார
நூல்: ஸூனன் அபுதாவூத் – இரண்டாம் பாகம் – ஹதீஸ் எண்: 1577, ஸூனன் அபீதாவூத்
முதல் பாகம் ஹதீஸ் எண்: 1400.)
தனது தந்தைக்கு, அவருடைய தந்தையான (அப்துல்லாஹ் இப்னு அம்ர்
இப்னு அல்ஆஸ்) அறிவித்ததாக அம்ர் இப்னு
ஸூஐப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘(அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்)
தனது பெண் மக்களின் நகைகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கணக்கிடுமாறு தனது பொறுப்பாளர்
ஷாலிம் அவர்களுக்கு
கட்டளையிடுவார்கள்.’ (ஆதார நூல் – ஸூனன்
தாரகுத்னி – இரண்டாம் பாகம் 107 ஆம் பக்கம்.)
அல்லாஹ்வின்
தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியபடி ‘தனது செல்வங்களிலிருந்து
ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கொடுப்பவர்’ என்ற
வாசகத்திலிருந்து, கைவசமிருக்கும் செல்வங்கள்
அனைத்திற்கும் ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கடமை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள
முடிகிறது. ஜக்காத் கொடுக்கும்போது
ஒருமுறை ஜக்காத் கொடுக்கப்பட்டச் செல்வத்துக்கு, மறுமுறை
ஜக்காத் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என வேறுபடுத்தி அறிவிக்கும் ஹதீஸ்கள் எதுவும் இல்லை.
அத்துடன் நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் அறிவிக்கும் செய்தியில்
குறிப்பிட்டுள்ளபடி – தனது பெண் மக்களின் நகைகளுக்கு
ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கணக்கிடுமாறு – என்கிற வாசகத்திலிருந்து
செல்வங்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கொடுக்கப்பட வேண்டும் என்பது தெளிவாக அறிந்து கொள்ள
முடிவதோடு, ஒருமுறை ஜக்காத் கொடுக்கப்பட்ட நகைகள்
மறுமுறை ஜக்காத் கொடுக்கப்படுவதிலிருந்து விலக்களிக்கப்படவில்லை
என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
முன்கூட்டியே
ஜக்காத் வழங்குதல்
ஒரு
வருடகாலம் அல்லது அதற்கும் முன்கூட்டியே ஜக்காத் வழங்கலாம் என அனுமதியளிக்கும்
ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் உள்ளன.
‘அல்லாஹ்வின் தூதர் அண்ணல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை
ஜக்காத் வசூல் செய்து வரும்படி அனுப்பினார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்
அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து
அவர்களுடைய சொத்துக்களுக்கு ஜக்காத் வழங்கும்படி கேட்டார்கள். அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கடிந்து
கொண்டார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து மேற்படி விபரத்தைத்
தெரிவித்தார்கள். ‘நிச்சயமாக, அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு தன்னுடைய
செல்வங்களுக்கான ஜக்காத்தை, இந்த வருடத்திற்கும், வருகின்ற வருடத்திற்கும் சேர்த்தே கொடுத்து
விட்டாரே!’ என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதார நூல்: ஸூனன்
தாரகுத்னி – பாகம் 2 – பக்கம் 124).
வருகின்ற
வருடத்திற்கும் ஜக்காத்
கொடுக்கப்பட்டு
விட்டதெனில், இந்த வருடம் தம் கைவசமுள்ள செல்வங்களுக்குத்தான்
கணக்கிடப்பட்டு, ஜக்காத் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது ஒரே
பொருளுக்கு இரண்டுமுறை ஜக்காத் கொடுக்கப்பட்டிருக்கிறது
என்பதுதான் இதன் அர்த்தம். மேலே கூறப்பட்ட இந்த செய்தி ஏற்கெனவே கொடுக்கப்பட்ட செல்வத்தின்; மீது மீண்டும் ஜக்காத் கொடுக்கலாம் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி
நிரூபிக்கிறது. அப்பாஸ்
ரளியல்லாஹு
அன்ஹு அவர்கள் தன்னிடமிருந்த செல்வங்களுக்கு ஒரே தடவையில் இரண்டு வருடங்களுக்குச் சேர்த்து, ஜக்காத் வழங்கியிருக்கிறார்கள். அவ்வாறு வழங்கியதை அல்லாஹ்வின்
தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே
ஜக்காத் வழங்கப்பட்டச் செல்வம்,
நம்
கைவசம் இருந்து ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், மறுவருடமும்
அந்த செல்வத்தின் மீது ஜக்காத்
செலுத்தப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட செய்திகளிலிருந்து
தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
அனாதைகளின்
செல்வங்களுக்கு ஜக்காத்
அனாதைகளின் செல்வம் சம்பந்தமாக
அறிவிக்கப்படும் கீழ்க்காணும் ஹதீஸ்கள், அனாதைகளின் செல்வங்கள் ஜக்காத்
செலுத்தப்படவேண்டிய அளவை அடையும்போது, மீண்டும் மீண்டும் ஜக்காத்
செலுத்தப்பட வேண்டும் என்பதை தெளிவாகத் தெரிவிக்கின்றன. அதாவது ஒருமுறை ஜக்காத் கொடுக்கப்பட்ட செல்வங்கள்
மறுமுறை ஜக்காத் கொடுக்கப்படுவதிலிருந்து
விலக்களிக்கப்படவில்லை என்பதை தெளிவாகத் தெரிவிக்கின்றன.
‘யாராவது ஒருவர் செல்வங்கள்
உடைய அனாதைகளை பராமரிப்பவராக
இருந்தால், அந்த செல்வங்களைக் கொண்டு
வியாபாரம் செய்யுங்கள். ஜக்காத் அதனை
(செல்வங்களை) விழுங்கிவிடும்வரை விட்டுவைக்காதீர்கள்’ என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை மக்களிடம்
உரையாற்றும்போது அறிவித்ததாக அம்ர்
இப்னு ஸூஐப் அவர்கள் அறிவிக்கிறார்கள். (இந்தச் செய்தியை தனக்கு தனது தந்தை அறித்ததாகவும், அவருக்கு அவரது தந்தை அறிவித்ததாகவும் தெரிவிக்கிறார்) (ஆதார
நூல்: ஸூனன் திர்மிதி. பக்கம் 69,
ஹதீஸ்
எண்: 644)(இந்த செய்தியை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள்
தெரிவிக்கிறார்கள்: பொதுவாக அம்ர்
இப்னு ஸூஐப், தனது பாட்டனார் பதிந்து
வைத்த ஏடுகளிலிருந்து ஹதீஸ்களை தெரிவிக்கக்
கூடியவர். இந்த ஹதீஸ் பலகீனமானது என்று கருதப்பட்டாலும், இந்த ஹதீஸை
பொருத்தவரை அம்ர் இப்னு ஸூஐப் அவர்கள் தனது பாட்டனாரான அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்
வாய்மொழியாக சொல்வதை கேட்டும் இருக்கிறார். ‘அநேகமான
எல்லா ஹதீஸ் கலை வல்லுனர்களும் இவரது செய்தியை ஆதாரமாக ஏற்றுக் கொள்கிறார்கள் என இமாம்
அல்-ஹாபிஸ் இப்னு ஹஜ்ர் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்’ என கூறினார்கள்.)
மேலே
குறிப்பிடப்பட்ட செய்தியை போன்று இரண்டாம்
கலிபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்பட்ட நம்பத் தகுந்த ஹதீஸ் கீழ்கண்டவாறு
கூறுகிறது:
‘ஜக்காத் அதனை விழுங்கிவிடாதவாறு, அநாதைகளின் செல்வங்களைக் கொண்டு வியாபாரம் செய்யுங்கள்;.’ (அல்-முஅத்தா – இமாம்
மாலிக்கி – பக்கம் 134 ஹதீஸ் எண்: 654).
இந்த
ஹதீஸ் அறிவிப்பின் தொடர் சரியானது என்றும்
இந்த ஹதீஸ் தொடர்பாக உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த இன்னும் பல அறிவிப்புகள் இருக்கின்றன எனவும்
ஸூனன் அல்குப்ரா மற்றும்
அல்-பைஹகீ
அவர்களும் தெரிவிக்கின்றனர். இதே அறிவிப்பைத்தான் முஅத்தாவில் இமாம் மாலிக் அவர்களும்
அறிவிக்கிறார்கள். (இமாம் மாலிக் அவர்களால் தொகுக்கப்பட்ட
‘முஅத்தா’ வில் பக்கம் 134, ஹதீஸ் எண்: 654 ஐப் பார்க்க.)
‘தங்களது மேற்பார்வையில்
இருக்கும் அனாதைகளின்
செல்வங்களிலிருந்து வருடந்தோறும் ஜக்காத் வழங்குவது ஸஹாபா பெருமக்களின் வழக்கமாக இருந்தது’ என்பது தலைசிறந்த மார்க்க அறிஞர்கள் பலரும் கூறியுள்ளனர். ‘அப்துல்லா இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள் அனாதைகளின் செல்வங்களைக்
(ஜக்காத் அதனை விழுங்கிவிடாதவாறு) கொண்டு வியாபாரம்
செய்வார்கள். அத்தகையச் செல்வங்களின் மீது ஒவ்வொரு வருடமும் ஜக்காத்தும் கொடுப்பார்கள்.’ என நாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (ஆதாரம்: முஸ்னப் அப்திர்ரஸ்ஸாக் – எண்: 7001).
அம்ர்
இப்னு ஸூஐப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும்
ஹதீஸை ஆதாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளத் தயக்கம் வரும் எனில், உமர் (ரலி)
அவர்களும், அவர்களின் மகன் அப்துல்லா
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் நடைமுறைப்படுத்தியதாக ஹதீஸ் கலை வல்லுனர்கள்
பலரும் தெரிவிக்கும்
செய்தியான
‘கைவசம் இருக்கும் செல்வங்கள், ஜக்காத் கொடுக்கப்பட வேண்டிய அளவுக்கு உள்ளபோது, அந்தச் சொத்து நம் கைவசம் இருக்கும் காலம்வரை, அந்த செல்வங்கள்
மீது வருடந்தோறும் ஜக்காத் வழங்க வேண்டும்’ என்பதற்கு
போதுமான ஆதாரமாகும்.ஜக்காத்
வழங்காதவருக்கு உரிய தண்டனைகள்:
ஜக்காத்
வழங்காமல் இருப்பது மிகப்பெரிய பாவமாகும்.
ஜக்காத் வழங்காமல் இருப்பதை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவ்வுலகில் ஜக்காத்
வழங்காதவர்களின் சொத்துக்களில் பாதியை பறிமுதல் செய்ய இஸ்லாமிய அரசுகளுக்கு உரிமை உண்டு.
அல்லாஹ்வின்
தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள்:‘மேயும் ஒட்டங்களுக்கு மூன்று
வயதுள்ள ஒரு பெண் ஒட்டகம் (ஜக்காத்தாக) கொடுக்கப்பட வேண்டும். பெண் ஒட்டகங்களை எண்ணிக்கையில்
சேர்ப்பதிலிருந்து தவற
விடக்கூடாது.
நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஜக்காத் வழங்குபவனுக்கு, நன்மைகள் உண்டு. எவரேனும் ஜக்காத் வழங்கத்
தவறினால், அவரது சொத்தில் பாதி அல்லாஹ்வுக்கு உரியதாக
எடுத்துக் கொள்ள உரிமை உண்டு. முஹம்மதுவின் குடும்பத்தார்
எவருக்கும் ஜக்காத்தில் எதனையும் பெற்றுக்கொள்ள அனுமதியில்லை’ என
பஹ்ஷ் இப்னு ஹாக்கிம் தனது பாட்டனார் தனக்கு தெரிவித்தாக தெரிவிக்கும் இந்த ஹதீஸ் நஸயீ, அபுதாவூத் (பாகம் 2 பக்கம் 411 – 2 – ஹதீஸ் எண்:
1570) ஆகிய ஹதீஸ் கிரந்தங்களில்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய
அரசு நடைபெறாத நாடுகளில்
ஜக்காத்
வசூலிக்கப்படுவதில்லை என்கிற காரணத்தால், ஜக்காத்
வழங்காதவர்கள் தப்பித்துக்கொண்டோம் என
எண்ணலாம். அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் ஜக்காத் வழங்காதவர்களுக்கு மறுமையில் கடுமையான தண்டனை
உண்டு என எச்சரிக்கிறான்:
‘ஈமான் கொண்டவர்களே!
நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான
முறையில் சாப்பிடுகிறார்கள்: மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்:
இன்னும் எவர்கள் பொன்னையும்,
வெள்ளியையும்
சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்;லாஹ்;வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம்
கூறுவீராக!
(நபியே! அவர்களுக்கு நீர்
அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த
நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) ‘இது
தான் நீங்கள் உங்களுக்காகச்
சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து
வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்’ (என்று கூறப்படும்). (அத்தியாயம் 9 – ஸூரத்துத் தவ்பா – 34 மற்றும் 35ஆம் வசனங்கள்)
அல்லாஹ்வின்
தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்
ஜக்காத் வழங்காதவர்களுக்கு மறுமையில் கடுமையான தண்டனை உண்டு என
எச்சரித்துள்ளார்கள்.அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ-ஹூரைரா
ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘அல்லாஹ் வழங்கிய
செல்வங்களிலிருந்து, ஜக்காத் வழங்காதவர்கள்
யாரோ, மறுமை நாளில் அவனது செல்வம் முழுவதும் வழுக்கைத்
தலையுள்ள, கண்களில் கருநிற
புள்ளிகளைக் கொண்ட விஷப்பாம்பாக
மாற்றப்படும். ‘நான்தான் உனது செல்வம்:
நான்தான் உனது பொக்கிஷம்’ என அந்த பாம்பு அவனது கழுத்தைச் சுற்றி, அவனது கன்னங்களைக் கடித்துக் கொண்டே கூறும்;.’ எனக் கூறினார்கள். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
அருள்மறை குர்ஆனிலிருந்து கீழ்க்காணும் வசனத்தை நினைவூட்டினார்கள்: ‘அல்லாஹ்; தன்
அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில்
யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் – அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்கு தான்: அவர்கள்
உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக
போடப்படும்;:’ (அத்தியாயம் 3 – ஸூரத்துல் ஆல – இம்ரான்
180வது வசனத்தின் ஒரு பகுதி.)
(ஆதாரம்: புகாரி – பாகம் – 2 பக்கம் 276 – 7 ஹதீஸ் எண்: 486.)‘செல்வங்களைச் சேமித்து
வைத்திருக்கும் ஒருவர் அவைகளுக்குரிய ஜக்காத்தை வழங்கவில்லையானால், அது (அவர்களது செல்வம்) நெருப்பில்
சூடாக்கப்பட்டு, அவரது இரு விலாக்களும், நெற்றியும் அதன் மூலம் சுடப்படும். இது
ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுள்ள நாளில், அல்லாஹ் தனது அடியார்களுக்கு தீர்ப்பு வழங்குகிற வரை நடந்து
கொண்டிருக்கும். பின்னர் தனது வழியை அவன் காண்பான். (அந்த
வழி) ஒன்று சுவர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ இருக்கும்’ என அல்லாஹ்வின்
தூதர் அண்ணல் நபி
ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு ஆதார நூல்: முஸ்லிம் ஹதீஸ் எண்: 2163). தவறான கருத்துக்கள்
ஏராளமான பேரை குறிப்பாக செல்வந்தர்களையும், பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்களையும்
கவர்ந்திழுப்பது போன்று தோன்றலாம். ஆனால் உண்மையானது பகலைப் போன்று தெளிவானது. அல்லாஹ்வின் தூதர்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறியதாக நுஹ்மான் இப்னு பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்
அறிவிக்கிறார்கள்:‘நிச்சயமாக ஹலால் தெளிவானது. அவ்வாறே
ஹராமும் தெளிவானது. இவை இரண்டுக்குமிடையில் சந்தேகமானவைகள்
சில உள்ளன. அதனை அதிகமான மக்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள். யார் சந்தேகங்களைத் தவிர்ந்து கொள்கிறாரோ, அவர் தனது மார்க்கத்தையும், மானத்தையும் பாதுகாத்தவர் ஆவார். யார்
சந்தேகத்தில் விழுகிறாரோ அவர் விலக்கப்பட்டதில்
(ஹராம்) விழுந்தவர் ஆவார்.’ (ஆதார நூல்: புஹாரி – ஹதீஸ் எண்:
48, முஸ்லிம் -ஹதீஸ் எண்: 3882)
முடிவாக, மேலே சுட்டிக்காட்டப்பட்ட அருள்மறை குர்ஆனின்
வசனங்களிலிருந்தும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறையிலிருந்தும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புத்தோழர்களின் அறிவிப்புகளிலிருந்தும், தலைசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின்
ஆய்வுகளிலிருந்தும் நம் கைவசம் இருக்கும் செல்வங்கள் ஜக்காத் கொடுக்கப்பட வேண்டிய அளவுக்கு இருக்குமெனில், (முந்தைய வருடம் ஜக்காத் கொடுக்கப்பட்டச் செல்வங்களாயினும், அல்லது ஜக்காத் கொடுக்கப்படாத செல்வங்களாயினும்) – ஒரு வருடம் நிறைவடைந்தவுடன் அதன் மீது
கண்டிப்பாக ஜக்காத் கடமையாகிறது
என்பதை நாம் சந்தேகத்துக்கிடமின்றி தெரிந்து கொண்டோம். முந்தைய வருடம் நம் கைவசம் இருந்த
செல்வங்களுக்கு அறியாமையின் காரணத்தால் அல்லது
அலட்சியத்தின் காரணத்தால் ஜக்காத் செலுத்தப்படாமல் இருப்பின், நடந்துவிட்ட தவறுகளுக்காக வல்ல அல்லாஹ்விடம்
பாவமன்னிப்புத் தேடிக்கொள்வதோடு, கடந்த வருடம் கொடுக்காத ஜக்காத்தையும்
உடனடியாக கணக்கிட்டு இப்போதே
உரியவருக்கு வழங்கி விடுங்கள்.அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனது நாட்டத்திலேயே
அனைத்து வணக்க வழிபாடுகளும் அமல்படுத்தப்பட வேண்டும்.