بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
குர்ஆனில் கூறபட்ட பிராணிகள்
பூமியில் ஊர்ந்து திரியக் கூடியவைகளும், தன்னுடைய இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவைகளும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) அன்றி வேறில்லை. (இவைகளில்) ஒன்றையுமே (நம்முடைய பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர் (ஒரு நாளில்) இவைகளும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும். [6:38](மனிதர்களே!) ஊர்ந்து செல்லக்கூடிய (உயிர்ப் பிராணிகள்) அனைத்தையும் அல்லாஹ் ஒரேவித தண்ணீரைக் கொண்டு படைத்திருந்த போதிலும் (அவை யாவும் ஒரு வகையாக இருக்க வில்லை.) அவைகளில் சில தன் வயிற்றால் (பாம்புகளைப் போல்) ஊர்ந்து செல்கின்றன. அவைகளில் சில இரு கால்களால் நடக்கின்றன. அவைகளில் சில நான்கு கால்களால் நடக்கின்றன. (இவ்வாறு) அல்லாஹ் தான் விரும்பியவைகளை (விரும்பியவாறு) படைப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். [24:45]
(கால்நடைகள் - الْأَنْعَامِ)
(ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றில் இருந்து கலப்பற்ற பாலை (உற்பத்தி செய்து) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அது அருந்து பவர்களுக்கு மிக்க இன்பகரமானது. [16:66]1. பசு மாடு (பகரா - الْبَقَرَة)
தவிர, "ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்" என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) "நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?" என்றார்கள். (அதற்கு) "நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனனாக ஆவதை விட்டும் அல்லாஹ் விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்றார். [2:67]இஜ்ல்(காளைக் கன்று -الْعِجْلَ)
(பின்னர் இறைவன் மூஸாவை நோக்கிக் கூறினான்:) "எவர்கள் காளைக்கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை நிச்சயமாக இறைவனின் கோபமும் இழிவும் இவ்வுலக வாழ்க்கையிலேயே அதிசீக்கிரத்தில் வந்தடையும். பொய்யைக் கற்பனை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். [7:152]நிச்சயமாக (மலக்குகளிலுள்ள) நம்முடைய தூதர்கள் இப்றாஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து "உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாகுக" என்று கூறினர். (இப்றாஹீம் அதற்குப் பிரதியாக "உங்களுக்கும்) ஈடேற்றம் உண்டாவதாகுக!" என்று கூறி சிறிதும் தாமதிக்காது (அறுத்துச்) சுட்டதொரு கன்றுக்குட்டியைக் கொண்டு வந்(து அவர்கள் முன் வைத்)தார்கள். [11:69]
2. செம்மறி ஆடு(ழான் - ٱلضَّأْنِ)
(நபியே! அம்மக்களிடம்) “கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்பீராக. [6:143](கனம் - غَنَمُ)
(அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன” என்று கூறினார். [20:18]
இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம். [21:78]
3. ஒட்டகம் (இப்ல் , ழாமிர், ஜமல்)
(இப்ல் - الْإِبِلِ)(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று [88:17]
இளைத்த ஒட்டகம்(ழாமிர் -ضَامِرٍ)
ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் [22:27]
மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சுமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்[12:65] [12:72](ஜமல் -الْجَمَلُ)
நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அதனைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம். [7:40]
4. தேனீ (நஹ்ல் -النَّحْل)
உங்களது இறைவன் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான்.அன்றி "நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளையிட்டான்.) இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. [16:68,69]
5. எறும்பு (நம்ல் - النَّمْل)
அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்தபொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்துவிட வேண்டாம்" என்று கூறியது. [27:18]6. சிலந்திப் பூச்சி (அன்கபூத் - الْعَنْکَبُوْت)
அல்லாஹ்வையன்றி (மற்றவைகளைத் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம்: நூலாம் பூச்சி கட்டிய வீட்டை(த் தாங்கள் வசிக்க எடுத்துக் கொண்டவர்களின் உதாரணத்தை) ஒத்திருக்கின்றது. வீடுகளில் எல்லாம் மிக்க பலவீனமானது நிச்சயமாக நூலாம் பூச்சியின் வீடுதான். (நூலாம் பூச்சியின் வீடு இவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியாதோ அவ்வாறே இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்ட தெய்வங்களாலும் இவர்களை பாதுகாக்க முடியாது. இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே! [29:41]7. யானை(ஃபீல் - الْفِيل)
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?[105:1]8. குரங்கு (கிர்ததுன் - قِرَدَةً)
மேலும் சனி(க்கிழமை)யில் (மீன் பிடிக்கக் கூடாதென்றிருந்த கட்டளையை) உங்களில் எவர்கள் மீறிவிட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் அவர்களை நோக்கி "நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுக!" எனக் கூறினோம் என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்தேயிருக்கின்றீர்கள். [2:65] [7:166]9. நாய் (கல்ப் - الْكَلْبِ)
அவர்களுடைய நாயோ தன் இரு முன்னங்கால்களையும் விரித்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது [18:18](நபியே!) நீங்கள் அவர்களுக்கு ("பல்ஆம் இப்னு பாஊர்" என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பியுங்கள். அவனுக்கு நாம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் "(பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான்.நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் (சரீர) இச்சையைப் பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. நீங்கள் அதனைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. அதனை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கும் (மற்ற) மக்களுக்கும் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள். [7:175-176]
10. குதிரை
(கைல் - الْخَيْلَ)மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக- [100:1]
குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும் (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவன் படைத்திருக்கிறான்.) இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான். [16:8]
பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு. [3:14]
(ஜியாத் - الصَّافِنَاتُ الْجِيَادُ)
நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உயர்ந்த குதிரைகள் (ஒரு) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்ட பொழுது [38:31]
11. கழுதை (ஹிமார் - الْحِمَارِ)
"தவ்றாத்" என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம்: புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகாகெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான். [62:5]உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!" [31;19]
12. கோவேறு கழுதை (பக்ல் - بَغْل)
இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். [16:8]13. "ஹுத்ஹுத்" என்னும் பறவை (الْهُدْهُدَ)
அவர் பறவைகளைப் பரிசீலனை செய்தபொழுது "என்ன காரணம்? "ஹுத்ஹுத்" என்னும் பறவையை நான் காணவில்லையே! (அது பறவைகளின் நெருக்கடியில்) மறைந்திருக்கின்றதா? (அல்லது என் அனுமதியின்றி எங்கேனும் சென்றுவிட்டதா?) [27:20]
14. வெட்டுக்கிளி (ஜராததுன் - جَرَادَة)
15. பேன்(கம்ல் - قَمْل)
16. தவளை . (ழிஃதஃ - ضِفْدَع)
ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும்,
தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக)
அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும்
சமூகத்தாராகவே ஆகியிருந்தனர். [7:133]
17. பாம்பு (ஜானுன் -جَآنٌّ , ஹய்யதுன் - حَيَّةٌ)
அவர் அதனை எறியவே அது ஒரு பெரிய பாம்பாகி ஓடிற்று. [20:20][27:10](அன்றி) "நீங்கள் உங்களுடைய தடியை எறியுங்கள்" (என்றும் அவருக்குக் கூறப்பட்டது. அவ்வாறே அதனை அவர் எறியவே) அது பெரியதொரு பாம்பாகி நெளிவதைக் கண்ட அவர் (பயந்து) அதனைப் பின்தொடராது திரும்பி ஓடினார். (அச்சமயத்தில் அவரை நோக்கி) "மூஸாவே! பயப்படாது நீங்கள் முன் வாருங்கள்! நிச்சயமாக நீங்கள் அச்சமற்றவர். [28:31]
18. கொசு (பஉழதன் -بَعُوضَة)
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை. [2:26]19. ஓநாய் ( தீப் - ذِئْب)
எங்கள் தந்தையே! நிச்சயமாக யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் விட்டுவிட்டு ஓடி (விளையாடிக் கொண்டே வெகுதூரம் சென்று) விட்டோம். அச்சமயம் அவரை ஓநாய் (அடித்துத்) தின்றுவிட்டது. நாங்கள் (எவ்வளவு) உண்மை சொன்ன போதிலும் (அதனை) நீங்கள் நம்பவே மாட்டீர்கள்" என்று கூறினார்கள் [12:17]20. சிங்கம் (கஸ்வரதுன் - قَسْوَرَةٍ)
அதுவும், சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடுகின்றனர்) [74:51]21. காகம் (குராபன் - غُرَابًا)
பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.22. ஈ (துபாபன் - ذُبَابًا)
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. [22:73]23. கரையான் - நிலத்தின் பூச்சி (தாப்பதின் அர்ழி - دَابَّةُ الْأَرْضِ)
அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை; அவர் கீழே விழவே; “தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. [34:14]24. மீன்(ஹூத் - ٱلْحُوتِ)
அவர்கள் இருவரும் இரு கடல்களும் சந்திக்கும் இடத்தை அடைந்தபொழுது தங்களுடைய மீனை அவர்கள் மறந்துவிட்டனர். அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (சென்று) விட்டது. [18:61 ,18:63(அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கிவிட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார். [37:142]
நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள (மீன் போன்ற) மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். [16:14]
25. திமிங்கலம் (நுவ்ன் -نُوْن)
இன்னும் (நினைவு கூர்வீராக:) திமிங்கலத்தின் தோழரை (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார். [21:87]26. பண்றி (கின்ஜீர் -الْخَنَازِيرَ)
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். [2:173, 5:3, 6:145,16:115]"அல்லாஹ்விடம் இதைவிடக் கெட்டதொரு தண்டனை அடைந்தவர்களை நான் உங்களுக்கு அறிவிக்கவா?" (என்று நபியே! நீங்கள் அவர்களிடம் கேட்டு) அல்லாஹ் எவர்களைச் சபித்து, அவர்கள் மீது கோபம்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும்; எவர்கள் ஷைத்தானை வணங்கினார்களோ அவர்களும்தான் மிகத் தாழ்ந்த ரகத்தினர். அன்றி, நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று நீங்கள் கூறுங்கள். [5:60]
27. பேசும் பிராணி(தாப்பதன் -دَابَّةً)
அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும். [27:82]رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக! [3:191]
No comments:
Post a Comment