بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
சுத்ரா - தடுப்பு
இமாமும், தனியாகத் தொழுபவரும் தமக்கு முன் தடுப்பு வைத்துக் கொள்வது அவசியமாகும்.
'சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தவிர நீங்கள் தொழாதீர்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! அவருடன் ஷைத்தான் இருக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: இப்னுஹுஸைமா 800, இப்னுஹிப்பான்2362, ஹாகிம் 921, பைஹகீ 3261
ஸஹீஹ் புகாரி பாடம் : 98 வாகன ஒட்டகம், சிவிகை (ஆகியவற்றை தடுப்பாக்கி தொழுவது போன்று) ஒட்டகம், மரம் ஆகியவற்றை(த் தடுப்பாக வைத்து அவற்றை) நோக்கித் தொழுவது.
507. நாஃபிவு அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஒட்டகத்தைக் குறுக்கே நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள்' என்று இப்னு உமர்(ரலி) கூறினார். 'ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டால்...?' என்று கேட்டேன். 'ஒட்டகத்தின் மீது அமைக்கப்படும் சாய்மானத்தை எடுத்து அதை நோக்கித் தொழுவார்கள்' என்று கூறியதுடன் அவரும் அவ்வாறே செய்வார்.
தடுப்பாக ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொள்ளலாம். இன்ன பொருள் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. தூணோ அல்லது சுவரோ இருந்தால் அதைத் தடுப்பாக்கிக் கொண்டு தொழலாம். தடுப்பாக வைத்துள்ள பொருளுக்கு நெருக்கமாக இருந்து தொழ வேண்டும்.
ஸஹீஹ் புகாரி பாடம் : 95 தூண்களை நோக்கித் தொழுவது. (பள்ளிவாச-ல் உள்ள) தூண்களில் சாய்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களைவிட தொழுபவர்களே அத(னைத் தடுப்பாக வைத்துத் தொழுவ)தற்கு அதிக உரிமை படைத்தவர்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். இரண்டு தூண்களுக்கு நடுவில் தொழுது கொண்டிருந்த ஒருவரை உமர் (ரலி) அவர்கள் கண்ட போது அவரை ஒரு தூணை நோக்கி நிறுத்தி, இதை நோக்கித் தொழுவீராக! என்று கூறினார்கள்.
502. யஸீத் இப்னு ஆபீ உபைத் கூறினார்.
நான் ஸலமா பனீ அல் அக்வஃ(ரலி) உடன் (பள்ளிக்கு) செல்பவர்களாக இருந்தேன். ஸலமா(ரலி) குர்ஆன் வைக்கப்படும் இடத்தில் அமைந்த தூணருகே தொழுவார்கள். அபூ முஸ்லிம் அவர்களே! இந்தத் தூணை தேர்ந்தெடுத்துத் தொழுகிறீர்களே?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில் தொழுவதற்குச் சிரத்தை எடுப்பவர்களாக இருந்ததை பார்த்திருக்கிறேன்' என்று பதிலளித்தார்கள்.
503. அனஸ்(ரலி) அறிவித்தார்.
மஃரிபு(க்கு பாங்கு சொன்னது) முதல் நபி(ஸல்) அவர்கள் வெளியே வரும் வரை முதிய நபித்தோழர்கள் (இரண்டு ரக்அத்கள் முன் ஸுன்னத் தொழுவதற்காகத்) தூண்களை நோக்கி விரைவார்கள்.
ஸஹீஹ் புகாரி பாடம் : 90 (கூட்டுத் தொழுகையின் போது) இமாம் வைத்துக் கொள்ளும் தடுப்பே (சுத்ரா) பின்னாலிருப்போருக்கும் போதுமானதாகும்.
493. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் 'மினா' எனுமிடத்தில் சுவர் (போன்ற தடுப்பு) எதுவுமின்றித் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது பெட்டைக் கழுதையின் மீது ஏறிக் கொண்டு அங்கே வந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் பருவ வயதை நெருங்கி இருந்தேன். மேய்வதற்காகக் கழுதையை அவிழ்த்துவிட்டுவிட்டு ஸஃபுக்கு முன்னே நடந்து சென்று வரிசையில் சேர்ந்து கொண்டேன். இதனை எவரும் ஆட்சேபிக்க வில்லை.
494. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (தொழுகை நடத்துவதற்காகத் திடல் நோக்கிச்) செல்லும்போது ஈட்டியை எடுத்து வருமாறு கூறுவார்கள். அவர்களுக்கு முன்னால் அது நாட்டப்பட்டதும் அதை நோக்கித் தொழுவார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னே இருப்பார்கள். பயணத்தின் போதும் இவ்வாறு செய்பவர்களாக இருந்தனர். இதனால்தான் (நம்முடைய) தலைவர்களும் அவ்வாறு செய்கின்றனர்.
495. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் 'பத்ஹா' எனுமிடத்தில் லுஹரையும் அஸரையும் இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுகை நடத்தினார்கள்.. அவர்களுக்கு முன்பு கைத்தடி ஒன்றுஇருந்தது. அதற்கு முனனால் கழுதையும் பெண்களும் நடப்பவர்களாக இருந்தனர்.
... பிலால் (ரலி) அவர்கள் ஒரு கைத்தடியை எடுத்து நாட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து ஆயத்தமாகி அந்தக் கைத்தடியை(த் தடுப்பாக) வைத்து இரண்டு ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவித்தார்கள். அந்தக் கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் ஆடு, மாடுகளும் குறுக்கே செல்வதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி)
நூல்கள்: புகாரீ 376, முஸ்லிம் 778
ஸஹீஹ் முஸ்லிம் பாடம் : 49 தொழுபவர் தடுப்புக்கு அருகில் நெருங்கி நிற்க வேண்டும்.
879. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழநிற்கும் இடத்திற்கும் (பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஓர் ஆடு கடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது.
880. யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்கு அருகில் (உள்ள தூண் அருகே) கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழுவார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து (இந்தத் தூணை முன்னோக்கி நின்று) தொழுவார்கள். சொற்பொழிவு மேடைக்கும் (மிம்பர்) கிப்லாவுக்கும் இடையே ஓர் ஆடு கடந்துசெல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது என்றும் குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
881. யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்குப் பக்கத்திலிருந்த தூணருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அவர்களிடம் நான், அபூ முஸ்லிம்! தாங்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதையே தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் காண்கிறேனே (என்ன காரணம்)? என்று கேட்டேன். அதற்கு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன் (ஆகவேதான், நானும் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்) என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் பாடம் : 50 தொழுபவருக்கு முன்னால் தடுப்பு எந்த அளவு இருக்க வேண்டும்?
882. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ், மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
883. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தடுப்பு இல்லாமல் தொழுகின்றவரின்) தொழுகையைப் பெண் (முறித்துவிடுவாள். மேலும்), கழுதை, நாய் ஆகியவை(யும்) முறித்துவிடும். வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது அதிலிருந்து பாதுகாத்துவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேற்குறித்த ஹதீஸில் இருந்து ஒரு முழத்தைவிட குறைவான அளவுள்ள பொருட்களை சுத்ராவாக(தடுப்பாக) வைத்துத் தொழுவதற்கு மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை.நிலத்தில் உள்ல கோடு பற்றி வரும் ஹதீஸ் “முழ்தரிப்” எனும் மறுக்கப்படவேண்டிய தரத்தில் அமைந்த ஹதீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுத்ராவின் பயன்கள்:
ஸஹ்ல் இப்ன் அபீ ஹதமா அறிவித்தார்.
உங்களில் தொழும் ஒருவர் ஷைத்தான் அவரது தொழுகையை முறித்திடாதவாறு (சுத்ரா) தடுப்பிற்கு நெருக்கமாக நின்று தொழுது கொள்ளட்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அபூதாவுத்:695 நஸயீ - 748)
இவ்வாறு தொழுவதால் உள்ளச்சத்துடனும், பார்வையை சிதறிவிடாமலும், அதனைக் கடக்க எத்தணிப் போரை தடுத்தும், நிம்மதியாக தொழுவதற்குத் துணையாகவும் அமைவதுடன், தொழுகையை ஊடறுத்துச் சென்று அதனை பாழடித்திடும் ஷைத்தான்களின் நடவடிக்கைகளிகலிருந்தும் தற்காத்துக் கொள்ள உதவும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தடுப்பு இல்லாமல் தொழுகின்றவரின்) தொழுகையைப் பெண் (முறித்துவிடுவாள். மேலும்), கழுதை, நாய் ஆகியவை(யும்) முறித்துவிடும். வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது அதிலிருந்து பாதுகாத்துவிடும். (ஸஹீஹ் முஸ்லிம்: 883)
கருப்பு நாய் என்பது ஷைத்தானாகும் என்றும் (ஒர் அறிவிப்பில்) உள்ளது. (முஸ்லிம்)
அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தொழும்போது "நான் உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்றும், "அல்லாஹ்வின் சாபத்தால் உன்னை நான் சபிக்கிறேன்"என்றும் மூன்று முறை கூறியதை நாங்கள் செவியுற்றோம். மேலும், அவர்கள் தமது கரத்தை விரித்து எதையோ பிடிப்பதைப் போன்று சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் தொழும்போது ஒன்றைக் கூறினீர்கள். இதற்கு முன் தாங்கள் அவ்வாறு கூறியதை நாங்கள் கேட்டதில்லையே? மேலும், நீங்கள் உங்கள் கரத்தை விரித்ததையும் நாங்கள் கண்டோமே (ஏன்)?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் "அல்லாஹ்வின் எதிரி இப்லீஸ் ஒரு தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு அதை என் முகத்தில் வைக்க (என்னிடம்) வந்தான். உடனே நான் "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று மூன்று முறையும் "அல்லாஹ்வின் முழு சாபத்தால் உன்னை நான் சபிக்கிறேன்” என மூன்று முறையும் கூறினேன். ஆனால், அவன் பின்வாங்கிச் செல்லவில்லை. பிறகு நான் அவனைப் பிடிக்க விரும்பினேன். அல்லாஹ்வின் மீதாணையாக! எம் சகோதரர் சுலைமான் (அலை) அவர்களின் வேண்டுதல் மட்டும் இல்லையாயின், காலையில் மதீனா நகரச் சிறுவர்கள் அவனுடன் விளையாடும் வகையில் (இந்தப் பள்ளிவாசலில்) அவன் கட்டிவைக்கப் பட்டிருப்பான்" என்று சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் :942, ஸஹீஹ் புகாரி :461)