بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
:::: மழையை பற்றி சில மணித்துளிகள்::::
1.இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுவது
.ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் 'ஹுதைபிய்யா' எனுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம்.
"என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கும் மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர்களாவர். இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவர்களாவர் என்று இறைவன் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி 846)
2.கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போது இறைவனிடம் பாதுகாப்புக் கோருவதும் மழை பெய்யும் போது மகிழ்ச்சி அடைவதும்.[முஸ்லிம் பாடம் : 3]
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது, "இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று கூறுவார்கள். வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களது முகம் மாறிவிடும்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள்; முன்னும் பின்னுமாக நடப்பார்கள். (நிம்மதியற்று ஒரு விதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) வானம் மழை பொழிந்துவிட்டால், அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும். இதை நான் அவர்களது
முகத்திலிருந்து அறிந்துகொண்டு (இது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா! (குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ‘ஆத்" சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது, (தவறாகப் புரிந்துகொண்டு) "இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்" (46:24) என்று கூறினார்களே, அத்தகைய மேகமாகவும் இது இருக்கலாம்" என்று பதிலளித்தார்கள். [முஸ்லிம் 1640]
3. மழையின் போது ஜுமுஆத் தொழுகைக்குச் செல்லாமலிருக்க அனுமதி (புகாரி பாடம் : 14)
மழை நேரத்தில் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளலாம்.(ஸஹீஹ் முஸ்லிம் பாடம் : 3)
அப்துல்லாஹ் இப்னு அல் ஹாரிஸ் அறிவித்தார்.
பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்று (பாங்கில்) கூறிய பிறகு ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் "ஸல்லூ ஃபுயூதிகும்" (உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுகள்) என்று கூறும்' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்தபோது 'என்னை விட மிகவும் சிறந்தவ(ரான நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்' என்று நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான்; எனினும், நீங்கள் சேற்றிலும் சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம்
தருவதை நான் விரும்பவில்லை' என்றும் குறிப்பிட்டார்கள்.
4. பாங்கு சொல்பவர் பாங்கின் வாசகங்களை "ஹையாஅலஸ்ஸ்லாத்தி" என்று கூறாமல் "ஸல்லூ ஃபுயூதிகும்" என்று மாற்றிக் கூற வேண்டும் (புகாரி 901)
.நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அப்போது "அலா ஸல்லூ ஃபிர்ரிஹால்" (ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்றும் அறிவிப்புச் செய்தார்கள். பிறகு "(கடுங்)குளிரும் மழையும் உள்ள இரவில் "ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்" என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்" என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.[ஸஹீஹ் முஸ்லிம் 1240]
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் குளிரும் காற்றும் மழையும் நிறைந்த ஓர் இரவில் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அறிவிப்பின் இறுதியில் "ஓர் அறிவிப்பு! நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்; இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்" என்று கூறினார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிரோ மழையோ உள்ள இரவில் பயணம் செய்யும்போது
தொழுகை அறிவிப்பாளரிடம் "நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்" என்று அறிவிக்குமாறு கட்டளையிடுவார்கள்" என்றும் குறிப்பிட்டார்கள். [ஸஹீஹ் முஸ்லிம் 1241]
5.மழையில் கொஞ்சம் நனைதல்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது மழை பெய்தது. உடனே அவர்கள் மழைத் துளிகள் தம்மீது விழும் விதமாக தமது ஆடையைச் சற்று விலக்கினார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே, ஏன் இவ்வாறு செய்தீர்கள்?"என்று கேட்டோம். அதற்கு அவர்கள் "இது (புத்தம் புதிதாக) இப்போதுதான் இறைவனிடமிருந்து வருகிறது" என்று பதிலளித்தார்கள். [ஸஹீஹ் முஸ்லிம் 1638]