Friday, August 25, 2017

பரகத்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

ஸஹீஹ் புகாரி 6452.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்:
எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளிவாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்றார்கள்; (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை. பிறகு உமர்(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள்.
பிறகு அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, 'அபூ ஹிர்ரே! (அபூ ஹுரைராவே!) என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; இறைத்தூதர் அவர்களே!' என்றேன். '(என்னைப்) பின்தொடர்ந்து வா!' என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் துணைவியாரிடம்) 'இந்தப் பால் எங்கிருந்து வந்தது?' என்று கேட்டார்கள். அவர்கள் 'இன்ன 'ஆண்' அல்லது 'பெண்' தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹுர்' என அழைத்தார்கள். நான் 'இதோ வந்துவிட்டேன்; இறைத்தூதர் அவர்களே!' என்றேன். 'திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்துவாருங்கள்' என்றார்கள்.
திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள்.
இப்போது நபி(ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. '(இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணைவாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பரும் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்னை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது' என (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டேன்.
பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹிர்' என அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள்' என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர். நபி(ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு 'அபூ ஹிர்!' என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!' என்று சொன்னேன். அதற்கவர்கள் 'நானும் நீங்களும் (மட்டும் தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே?)' என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான்' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'உட்கார்ந்து (இதைப் பருகுங்கள்' என்றார்கள். நான் உட்கார்ந்து பரும்னேன். 'இன்னும் பருகுங்கள்' என்றார்கள். பரும்னேன். இவ்வாறு அவர்கள் 'பருகுங்கள்' என்று சொல்லிக்கொண்டேயிருக்க, நான் பரும்க்கொண்டேயிருந்தேன். இறுதியில் 'இல்லை; சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை' என்றேன். நபி(ஸல்) அவர்கள் '(சரி) அதை எனக்குக் காட்டுங்கள்' என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பரும்னார்கள்.


ஸஹீஹ் புகாரி 4102.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, 'நபி(ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா?' என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதில் ஒரு 'ஸாவு' அளவு வாற்கோதுமையிலிருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக்குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தாள். நான் (அறுத்து) முடிக்கும்போது அவளும் (அரைத்து) முடித்துவிட்டாள். மேலும் அதனைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியிலிட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும்போது என் மனைவி,) 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்திவிடவேண்டாம். ('உணவு கொஞ்சம் தானிருக்கிறது' என்று கூறிவிடுங்கள்)' என்று சொன்னாள். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இரகசியமாக, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு 'ஸாவு' அளவு வாற்கோதுமையை அரைத்தும் வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்' என்று அழைத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் உரத்த குரலில், 'அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள்' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஜாபிர் - ரலி - அவர்களிடம்), 'நான் வரும் வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்கவேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்' என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். (நபி - ஸல் - அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) என்னைக் கடிந்து கொண்டாள். உடனே நான், 'நீ நபி(ஸல்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன்' என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். நபி(ஸல்) அவர்கள் அதில் (தம் திரு வாயினால்) உமிழ்ந்தார்கள். மேலும், மாவில் பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் உமிழ்ந்து பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி), 'ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழை. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே' என்று கூறினார்கள். அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவைவிட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்தமெழுப்பியவாறு கொதித்துக கொண்டிருந்தது. அது (கொஞ்சம் குறையாமல்) முன்பிருந்தது போன்றே இருந்தது. மேலும், எங்கள் குழைத்தமாவும் (கொஞ்சமும் குறைந்து விடாமல்) முன்பு போன்றே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது.


ஸஹீஹ் முஸ்லிம் 4143.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "ஒரு பகல்" அல்லது "ஓர் இரவு" (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு, "பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!" என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது" என்று கூறிவிட்டு, "எழுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.
அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், "வாழ்த்துகள்! வருக" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், "அவர் எங்கே?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், "எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்" என்று பதிலளித்தார்.
அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை" என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், "இதை உண்ணுங்கள்" என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்"என்று கூறினார்கள்.
அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூபக்ர் (ரலி) அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் (ஓரிடத்தில்) அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "இங்கு நீங்கள் இருவரும் அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும், "தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! பசிதான் எங்களை எங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது" என்று கூறினர்" என ஹதீஸ் துவங்குகிறது. மற்ற நிகழ்வுகள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.


The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...