அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்
ஜூம்மாவுடைய நேரத்தில், சூரியன் உச்சி நிலையில் இருக்கும்பொழுது சிலர் தஹிய்யதுல் மஸ்ஜித் எனும் மஸ்ஜித் காணிக்கைத் தொழுகையை தொழுவதை நாம் பரவலாக காண முடிகிறது. இந்த தொழுகை மட்டும் அல்லாமல், மற்றும் சில தொழுகைகளும் தொழலாமென சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
தொழக்கூடாத மற்றும் இறந்தவர்களை அடக்க கூடாத நேரம்:
உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள்.
1.சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும்வரை,
2.ஒருவர்உச்சிப் பொழுதில் நிற்கும்போது நிழல் விழாது போகும்) நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும்வரை.
3.சூரியன் அஸ்தமிக்கத் தலைப்பட்டதிலிருந்து நன்கு மறையும்வரை. (ஸஹீஹ் முஸ்லிம்:1511)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:சூரியனின் ஒரு பகுதி (கிழக்கில்) தோன்றும் போது (தொழாதீர்கள்.) அது முழுமையாக வெளிப்படும்வரைத் தொழுவதைத் தாமதப்படுத்துங்கள்; சூரியனின் ஒரு பகுதி (மேற்கில்) மறையும்போது (தொழாதீர்கள்); அது முழுமையாக மறையும்வரைத் தொழுகையைத் தாமதப்பபடுத்துங்கள்.-இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்:1509)
ஏன் இந்நேரதில் தொழக்கூடாது மற்றும் இறந்தவர்களை அடக்க கூடாது::
அம்ரா பின் அபாஸா அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்: "ஆம், இறைவன் தன் அடிமைக்கு மிக நெருக்கமானது இரவின் கடைசிப் பகுதியில் தான், அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களில் நீங்களும் இருக்க முடிந்தால், அவ்வாறு செய்யுங்கள். தொழுகைக்கு சூரியன் உதிக்கும் வரை (வானவர்களால்) சாட்சியாக இருக்கும், பின்னர் அது ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு இடையே உதயமாகும், அது இறைமறுப்பாளர்களின் தொழுகை நேரமாகும். எனவே சூரியன் ஈட்டி உயரத்திற்கு எழுந்து அதன் கதிர்களின் மறையும் வரை தொழ வேண்டாம்.
பிறகு தொழுகை சூரியன் உச்சியை அடையும் வரை வானவர்கள் சாட்சியாளார்களாக இருப்பர்கள். உச்சி வேளை நரகத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு, அது எரியூட்டப்படும் நேரமாகும், எனவே நிழல்கள் தோன்றும் வரை தொழாதீர்கள்.
பிறகு தொழுகை சூரியன் ஷைத்தானின் கொம்புகளுக்கு இடையே அஸ்தமிக்கும் வரை வானவர்களால் சாட்சி அளிக்கபடும். அதுவும் இறைமறுப்பாளர்களின் தொழுகை நேரமாகும்". (நஸயி:572 ஸஹீஹ் தாருஸ்ஸலாம்)
அஸருக்குப்பின் சூரியன் மறையும் வரையிலும், சுப்ஹூக்குப்பின் சூரியன் உதிக்கும் வரையிலும்
இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்,அஸருக்குப்பின் சூரியன் மறையும் வரையிலும், சுப்ஹூக்குப்பின் சூரியன் உதிக்கும் வரையிலும் தொழக்கூடாது என்பதே பெரும்பாலான அறிஞர்களில் கருத்தாகும். அதேநேரத்தில் விடுபட்ட தொழுகை எதாவது இருந்தால் அல்லது மக்காவில் இறையில்லம் கஅபாவை சுற்றி(தவாஃப்) வந்த பின்னர் உள்ள தொழுகையை தொழலாம் என நபிதோழர்கள் மற்றும் அதற்கடுத்த ஒரு சாரார் கூறுகின்றனர். இதற்கு காரணம் நபி(ஸல்) அவர்கள் விடுபட்ட லுஹருக்கு பிந்தியதான இரண்டு ரக்ஆத்துககள் தொழுததினால் ஆகும். இதுவே ஷாஃபி(ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல்(ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி(ரஹி) ஆகியோரின் கூற்றாகும்.
ஆனால் நபிதோழர்கள் மற்றும் அதற்கடுத்த ஒரு சாரார் மக்காவில்கூட அவ்விரு நேரங்களில் தொழக்கூடாது என்கின்றனர்.
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்), மாலிக் பின் அனஸ்(ரஹ்), கூஃபாவாசிகளில் சிலர் ஆகியோர் இவ்வாறே கூறுகின்றனர். (திர்மிதி:169)
குறிப்பு: இந்த கருத்து வேறுபாட்டில் குறிப்பிட்ட உதயம், உச்சம், அஸ்தமம் பற்றி குறிப்பிடப்படவில்லை
[1.] தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை தடுக்கப்பட்ட நேரத்தில் தொழுவது
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இன்ன மனிதரே, தொழுதுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை" என்றார். "எழுந்து, தொழுவீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்:1584)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால், உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.
இதை அபூகத்தாதா அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரி :444, திர்மிதி:290, இப்னுமாஜா :1012, இப்னு குஸைமா: 1827)
இந்த ஹதீஸுக்கு விளக்கமளிக்கையில் இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் , "ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் தக்க காரணமின்றி இரண்டு ரக் அத்துக்கள் தொழாமல் அமர்வது விரும்பதக்கதல்ல என்று நம் (நபி இயல்) நண்பர்கள் கருதுகின்றனர்" எனக் கூறுகிறார்கள்.
தக்க காரணம் உண்டெனில் அமரலாம்:::
அபு அல்-ஜாஹிரியா(ரஹ்) கூறினார்:அப்துல்லா இப்ன் புஷ்ர் ஆறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்து மக்களின் தோள்களை தாண்டி தொண்டிருந்தார். இதை கண்ட நபி (ஸல்) அவர்கள்,"அமருங்கள், நீங்கள் (மக்களுக்கு) எரிச்சலூட்டினீர்கள்" என்று கூறினார்கள்(அபுதாவுத்:1118, நஸயி:1399. இப்ன் மாஜா:1115 ஸஹீஹ் அல்பானி,தாருஸ்ஸலாம்)
அபூவாக்கித் (ஹாரிஸ் பின் மாலிக் அல்லைஸீ - ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது, மூன்று பேர் வந்துகொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப்படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். (பள்ளிவாசலுக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னால் வந்து நின்றார்கள்.அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது, அதில் அமர்ந்துகொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக்கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு(க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே, அல்லாஹ் வும் அவரிடம் வெட்கப்பட்டுக்கொண் டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே, அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான் (ஸஹீஹுல் புகாரி :66)
இந்த ஹதீஸ்களிருந்து தொழாமல் அமர்வது ஹராம் அல்ல. தொழாமல் அமர வேண்டாம் என்ற இந்த ஏவல் கட்டாயம் என்பதைக் குறிக்காது என எடுப்பதே பொருத்தமானதாகும்.
1. முன் பின் சுன்னத்துகளை தொழுவது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையை விட்டும் போதுமாகும்.
2. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (அந்த ஃபர்ள்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம்::1281)
[2.] விடுபட்ட தொழுகை தடுக்கப்பட்ட நேரத்தில்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரேனும் ஒரு தொழுகையை(த் தொழ) மறந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை. (அல்லாஹ் கூறுகின்றான்:) என்னை நினைவுகூரும் பொருட்டு தொழு கையை நிலைநிறுத்துவீராக. (20:14) (ஸஹீஹுல் புகாரி:597)
சூரியன் முழுமையாக உதிப்பதற்கு காத்துக்கொண்டு தொழுவித்த நபி(ஸல்)
அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ர-) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (பயணம்) சென்றுகொண்டிருந் தோம். அப்போது மக்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! (பயணத்தை சற்று நிறுத்தி) எங்களை இளைப்பாறச் செய்ய லாமே!” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (ஃபஜ்ர்) தொழாமல் உறங்கிவிடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன்” என்றார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள், “உங்களை நான் விழிக்கச்செய்கிறேன்” என்று கூறினார்கள். எனவே, அனைவரும் (பயனத்தை நிறுத்தி) படுத்துக்கொண்டனர்.பிலால் (ரலி) அவர்கள் தமது முதுகைத் தமது வாகனத்தின் மீது சாய்த்துக்கொண்டி ருந்தபோது தம்மையும் மீறி கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். சூரிய வட்டத்தின் ஒரு பகுதி உதித்துவிட்ட நிலையில், நபி (ஸல்) அவர்கள் (முதன் முத-ல்) உறக்கத்தி-ருந்து விழித்தார்கள். உடனே, “பிலால்! நீங்கள் சொன்னது என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். “இதுபோன்று உறக்கம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை” என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ், தான் நாடும்போது உங்கள் உயிர்களைக் கைப்பற்றிக்கொள்கிறான்; தான் நாடும்போது உங்களிடம் திருப்பித் தருகின்றான்” என்று கூறிவிட்டு, “பிலால்! எழுந்து, பாங்கு சொல்- தொழுகைக்கு மக்களை அழைப்பீராக!” என்று கூறினார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, சூரியன் உயர்ந்து தெளிவாகத் தென்பட்ட போது (ஃபஜ்ர்) தொழு(கையை முன்னின்று நடத்)திடலானார்கள். (ஸஹீஹுல் புகாரி :595)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஃபஜருடைய (முன்சுன்னத்) இரண்டு ரக் அத்களை தொழாதவர், சூரியன் உதயமான பின்னர் அவற்றைத் தொழுது கொள்ளட்டும்". இதை அபுஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அபூஈஸா திர்மிதி கூறுகின்றேன்: "இப்ன் உமர்(ரலி) அவர்கள் இவ்வாறு தொழுதுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமென்று சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹி), ஷாஃபி(ரஹி), அஹ்மத் பின் ஹன்பல்(ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி(ரஹ்), அப்துல்லாஹ் பின் முபாரக்(ரஹ்) போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். (திர்மிதி:388)
[3.] மக்காவில் அஸருக்குப் பிறகும் சுப்ஹுக்குப் பிறகும் தவாஃப் தொழுகை தொழலாமா
ஜூபைர் பின்முத்இம்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள்,"அப்து மனாஃபின் மக்களே! இந்த இறையில்லத்தைச் சுற்றி(தவாஃப்) வந்துவிட்டு தாம் நாடியபடி இரவு பகல் எந்நேரமும் தொழக்கூடிய யாரையும் தடுக்காதீர்கள்.
மக்காவில் அஸருக்குப் பிறகும் சுப்ஹுக்குப் பிறகும் தொழலாமா என்பது குறித்து அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். சிலர், அஸருக்குப் பிறகும் சுப்ஹுக்குப் பிறகும் தொழுவதும் தவாஃப் செய்வதும் தவறல்ல" என்று கூறுகின்றனர்.
இதுவே ஷாஃபி(ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல்(ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி(ரஹ்) அகியோரின் கூற்றாகும்.
வேறு சிலர்."அஸருக்குப்பின் தவாஃப் செய்கின்றவர், சூரியன் மறையும்வரை தொழக்கூடாது, சுப்ஹுத் தொழுகைக்குப் பிறகு தவாஃப் செய்கின்றவர் சூரியன் உதிக்கும்வரை தொழக் கூடாது" என்று கூறுகின்றனர். இதற்கு அவர்கள் உமர்(ரலி) அவர்கள் குறித்து வந்துள்ள ஒரு ஹதீஸை சான்றாகக் குறிப்பிடுகின்றனர்,
உமர்(ரலி) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் தவாஃப் செய்துவிட்டு, தொழாமலேயே மக்காவைவிட்டு புறப்பட்டுச் சென்று, 'தீ துவா' எனும் இடத்தில் தங்கினார்கள். அங்கு சூரியன் உதித்தபிறகு தொழுதார்கள்.
தவாஃப் செய்தவர் இவ்விரு நேரங்களிலும் தொழலாகாது என்பதே சுஃப்யான அஸ்ஸவ்ரி(ரஹி), மாலிக் இப்ன் அனஸ்(ரஹி) ஆகியோரின் கூற்றாகும். (திர்மிதி:795 , மலிக் முவத்தா:821)
குறிப்பு: இந்த கருத்து வேறுபாட்டில் குறிப்பிட்ட உதயம், உச்சம், அஸ்தமம் பற்றி குறிப்பிடப்படவில்லை
ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள், 'வஸீலா தேடுவதன் தெளிவான சட்டங்கள்', என்ற புத்தகத்தில் கூறுகிறார்கள் : "
ஒரு செய்கை (அது எத்தகைய செய்கையானாலும் சரியே) அதைப் புரிவதினால் மனிதன் தன்னை அறியாமலே தவறின்பால் திரும்பி விடுவான் என்றும், அதில் எந்த பலாபலன்களுமில்லை என்றும் தெரிய வந்தால் அதைச் செய்யக்கூடாதென்று அவசியம் மனிதனை தடுக்க வேண்டும். இது சட்டக்கலை அறிஞர்களின் பொதுவான தீர்ப்பாகும்.
தொழுகை என்பது இறைவனின் திருப்தியைப் பெறுவதற்குரிய ஒரு தூய்மையான வழிப்பாடாகும். அதை மிக விரும்பத்தகுந்த வழிப்பாடுகளில் சேர்க்க வேண்டும்.
ஆனால் மேற்கூறப்பட்ட இம்மூன்று நேரங்களிலும் இந்த வழிப்பாட்டை (தொழுகையை) நிறைவேற்றும்போது தீமையான செயலாக அத்தொழுகை நிரூபிக்கப்படுகிறது. ஏனெனில் இந்நேரம் முஸ்லிம்களால் நிறைவேற்றப்படும் தொழுகை இணைவைக்கும் ஷிர்க்குக்காரர்களின் தொழுகையோடு ஒப்பாகிவிடும். சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள், கோளங்கள் இவற்றை வணங்கி வழிபடுகின்ற முஷ்ரிக்குகள் இவற்றிற்கு தலைசாய்த்து ஸுஜுது செய்து இந்நேரங்களில் தம் வணக்கங்களை செலுத்துகின்றனர். நட்சத்திரங்களிடமும், சூரிய சந்திரன்களிடமும் தம் தேவையை வேண்டுகின்றனர். இப்படியுள்ள நேரத்தில் இம்முஷ்ரிக்குகளுடன் சேர்ந்து தொழுதால் (நாமும் முஷ்ரிக்குகளுடன் வணங்கும் நேரத்தில் ஒத்திருந்தால்) நம்மையும் அந்த வணக்கங்கள் சில நேரங்களில் ஷிர்க்கின் பக்கமாக இழுத்து விடுகிறது.
அன்றியும் இவ்வேளைகளில் தொழுவதில் பிரத்தியேகமான சிறப்போ, மேன்மையோ, விசேஷமோ ஒன்றுமில்லை. பொதுவாக தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தி அவன் திருப்தியைப் பெறலாம் என மனிதன் எண்ணினால் கூட அவ்வெண்ணம் வீணாகி விடாது. ஏனெனில் (இது அல்லாத) எந்த நேரமும் தொழமுடியும். அதற்கு அனுமதியும் உண்டல்லவா? எனவே இக்குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் தொழாவிட்டாலும் வேறு எல்லா நேரங்களிலும் தொழலாம். தொழுகையினால் கிடைக்கும் பிரதிபலன்களும் இந்த விலக்களினால் துண்டிக்கப்பட்டு விடாது. மனிதன் தீமையிலிருந்தும் காப்பாற்றப்படுகிறான்.
ஆக இந்நேரங்களில் தொழவேண்டாமென தடுக்கப் பட்டிருப்பதெல்லாம் அத்தொழுகையைத் தொழுகிறவன் முஷ்ரிக்குகளைப் போன்று சூரியனை வணங்கி, சூரியனிடம் தன் தேவைகளுக்காகப் பிரார்த்தித்து, அதற்கு வழிபட்டு அதனால் ஷிர்க்கின்பால் சென்று விடலாகாது என்பதை பயப்படுவதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு இந்நேரங்களைத் தடுத்திருக்கிறார்கள்".
https://www.islamkalvi.com/?p=118365