بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1.) அரஃபா தினம் அதைக்கொண்டு அல்லாஹ் அவனது மறையில் சத்தியம் செய்து சிறப்பித்த நாளாகும்வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாளின் மீதும், சாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 85: 2,3)
அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் நவின்றார்கள்: 'வாக்களிக்கப்பட்ட நாள் என்பது மறுமை நாளாகும், சாட்சியம் கூறப்படும் நாள் அரஃபா நாளாகும். சாடசியம் கூறும் நாள் வெள்ளிக்க்கிழமையாகும்.[திர்மிதி:32522]
2.) அல்லாஹ் ஆதமுடைய சந்ததியினரிடம் வாக்குறுதி வாங்கிய நாள் அரஃபா தினமாகும்.
"அல்லாஹ் ஆதமுடைய முதுகந்தண்டிலிருந்து அவன் படைக்கப் போகிற எல்லா சந்ததிகளை வெளியாக்கி அணுக்களைப் போன்று அவர்களை தனக்கு முன் பரப்பி அவர்களிடம் வாக்குறுதி வாங்கியது அரபாவில் தான் அப்போது அவர்களையே அவர்களுக்கு சாட்சியமாகவும் வைத்து அவர்களை நோக்கி உரையாடினான் நான் உங்கள் இறைவனாக இல்லையா? என்று அவன் கேட்டதற்கு ஏன் இல்லை. நீதான் எங்கள் இறைவன் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம் என்று அவர்கள் கூறினார்கள் நபியே நீங்கள் அவர்களுக்கு இதை ஞாபகமூட்டுங்கள் ஏனென்றால் இதனை மறந்துவிட்டு பாராமுகமாகி இருந்தோம் என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும், அல்லது பொய்யான தெய்வங்களை இனையாக்கியதெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள்.ஆகவே (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக எங்களை நீ அழித்துவிடலாமா? என்று கூறாதிருப்பதற்காகவே (இதனை நாம் ஞாபகமூட்டுகிறோம் என்று நபியே நீங்கள் கூறுங்கள்
[அல்குர்ஆன் 7:172) விளக்கவுரை: நபிமொழி-அஹ்மது:2455 ஷைக் அல்பானி ஸஹீஹ் எனக் கூருகிறார்கள் , நஸயி: 11127]
3.) அரஃபா பெருநாள் தினமாகும்
தாரிக் இப்னு யுஹாப்(ரஹ்) அறிவித்தார்.
யூதர்கள் உமர்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள், அந்த வசனம் மட்டும எங்களிடையே இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்' என்று கூறினர். உமர்(ரலி), 'அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரஃபா (ஃதுல்ஹஜ் -9ஆம்) நாளில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்.
[புகாரி 4606 , முஸ்லிம் 5740]
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: அரபாநாள், அறுத்துப்பலியிடும் நாள், மினாவுடைய நாட்கள் ஆகியன இஸ்லாத்துக்கு சொந்தக்காரர்களாகிய எங்களுக்கு பெருநாள் தினமாகும். (அபூதாவூத்) அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியை ஸஹீஹான அறிவிப்பாகக் கூறுகின்றார்கள்.
4.) அரஃபா - மலக்குகளிடம் அல்லாஹ் பெருமிதம்
"பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக நிற்கும் எனது அடியார்களைப் பாருங்கள்'' என்று அரஃபா பெருவெளியில் நிற்கும் மக்களைப் பற்றி மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)[அஹ்மத் 7702]
5.) அரஃபா - நரக விடுதலை நாள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். "இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?" என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான். [முஸ்லிம் 2623]
6.) அரஃபா நாளின் துஆவே சிறந்த துஆவாகும்
துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும். நானும் எனக்கு முந்தைய நபிமார்களும் சொன்னதில் சிறந்தது, "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு ஹுல்ல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்' ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரலி), [திர்மிதி 3499 (கரிப்), முவைத்தா மாலிக்:572,1270,முஸ்னத் அஹ்மத்:6961]
7.) அரஃபா நோன்பு (ஹாஜி அல்லாதோருக்கு)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் [முஸ்லிம் 2151]