Monday, December 10, 2018

நபி(ஸல்) அவர்களின் ஒரு நாள் பொழுது


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

நபி(ஸல்)  அவர்களின் ஒரு நாள் பொழுது


1. இரவுத்தொழுகை தொழுவார்கள்,  பிறகு வீட்டிலேயே இரண்டு ரகாயத் ஃபஜரின் முன்சுன்னத்தை தொழுவார்கள்
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (வழக்கமான) தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதக் கூடிய நேரம் ஒரு ஸஜ்தாச் செய்வார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஃபஜ்ருத் தொழுகைக்காக முஅத்தின் அழைக்கும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.  (புகாரி: 
1123)


2. பள்ளிக்குச் சென்று ஃபஜர் தொழுவார்கள்


3. சுப்ஹுத் தொழுகைக்குப் பின் (சூரிய உதயம்வரை) தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள்


சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள். (முஸ்லிம்:1188)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்திலேயே வீற்றிருக்கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள்."இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!" என்று அவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவருக்குச் சிறு துடக்கு ஏற்படாமல் இருந்தால். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துத் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்வரை அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். (முஸ்லிம்:1175, புகாரி:477,647)

4. இரண்டு ரக் அத்கள் (இஷ்ரக்) தொழுதல்

அனஸ் இப்ன் மாலிக்(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "ஒருவர் அதிகாலைத் தொழுகையை ஜமாத்துடன் தொழுதுவிட்டு, சூரியன் உதயமாகும்வரை (அந்த இடத்திலேயே) இறைவனை நினைவுகூர்ந்த வண்ணம் அமர்ந்துவிட்டுப் பிறகு இரண்டு ரக் அத்கள் (இஷ்ரக்) தொழுதால், அவருக்கு ஒரு ஹஜ், ஒர் உம்ராவின் நன்மை போன்றது கிடைக்கும்" என்று கூறினார்கள். (திர்மிதி: 535, இந்த ஹதீஸை ஹஸன் என இமாம் அல்பானி(ரஹி) ஸஹீஹ் திர்மிதியில் கூறுகிறார்கள்)

5. வீட்டிற்கு வந்து உண்பார்கள்

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, "உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நாங்கள் "இல்லை" என்றோம். "அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்துகொள்கிறேன்" என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நமக்கு "ஹைஸ்" எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது" என்றோம். அதற்கு அவர்கள், "எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்" என்று கூறிவிட்டு, அதை (வாங்கி)ச் சாப்பிட்டார்கள். (முஸ்லிம்: 2125)

6. ளுஹா  தொழுவார்கள்

காசிம் பின் அவ்ஃப் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் "ளுஹா" தொழுதுகொண்டிருந்த ஒரு கூட்டத்தாரைக் கண்டார்கள். அப்போது "இந்தத் தொழுகையை இந்நேரத்தில் அல்லாமல் வேறு நேரத்தில் தொழுவதே சிறந்தது என இவர்கள் அறிய வேண்டாமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சுடுமணலில் ஒட்டகக்குட்டியின் கால் குழம்புகள் கரிந்துவிடும் நேரமே அவ்வாபீன் தொழுகையின் நேரமாகும்" எனக் கூறினார்கள்" என்றார்கள். (முஸ்லிம்: 1361)

7. மதிய ஓய்வெடுப்பார்கள்

நபி(ஸல்) கூறினார்கள்:
நடுப்பகலில் உறங்குங்கள், ஏனென்றால் ஷைத்தான் நடுப்பகலில் உறங்குவதில்லை.
தபரானி - அல்-அவ்சாத் :28 , ஷைக் அல்பானி இதை  ஹஸன் என கூறுகிறார்கள் அஸ்ஸஹீஹாஹ் 1647
அனஸ்(ரலி) அறிவித்தார்.
(என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்காக (அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் பொருட்டு) தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் நபி(ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்களின் (உடலிலிருந்து வழிகின்ற) வியர்வைத் துளிகளையும் (ஏற்கனவே தம்மிடமுள்ள) நபியவர்களின் தலைமுடியையும் எடுத்து ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரிப்பார்கள். பிறகு அதனை வாசனைப் பொருளில் வைப்பார்கள். வாசனைப் பொருளில் வைப்பார்கள். (இதையெல்லாம்) நபி(ஸல்) அவர்கள் உறங்கும்போதே (செய்து முடிப்பார்கள்) (புகாரி:6281)
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு அரும்லுள்ள) 'குபா' எனுமிடத்திற்குச் சென்றால் (தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டுக்குச் செல்வது வழக்கம். (அவ்வாறு செல்லும்போது) உம்மு ஹராம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு உணவளிப்பார்கள். உம்மு ஹராம்(ரலி) அவர்கள் உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் துணைவியாராவார். அவ்வாறே ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களுக்கு உம்மு ஹராம் உணவளித்தார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அங்கு) உறங்கினார்கள். பிறகு எழுந்து சிரித்தார்கள். (புகாரி:6282, 6283)

8. தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள்

அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்:
நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'நபி(ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.(புகாரி:5363,6039)

9. மக்ரிப் தொழுகைக்கு பிறகு இரவு உணவு உண்பார்கள்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:'இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்.'
என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி:671)

இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்ததார்கள்
அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார்.'நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.' (புகாரி:568)

அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு, இஷாத் தொழும் வரை அங்கேயே தங்கிவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய அளவு கழிந்த பின் (வீட்டிற்கு) வந்தனர்.
'உங்கள் விருந்தினரைவிட்டுவிட்டு எங்கே தங்கி விட்டீர்?' என்று அவர்களின் மனைவி கேட்டனர். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அவர்களுக்கு இன்னும் நீ இரவு உணவு அளிக்கவில்லையா?' என்று திருப்பிக் கேட்டார்கள். 'உணவை முன் வைத்த பின்பும் நீங்கள் வருவது வரை அவர்கள் உண்ண மறுத்துவிட்டனர்' என்று மனைவி கூறினார். (என் தந்தை கோபிப்பார் என்பதை அறிந்த) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.
'அறிவிலியே!' 'மூக்கறுபடுவாய்!' என ஏசினார்கள். பிறகு மகிழ்வற்ற நிலையில் 'சாப்பிடுங்கள்! அல்லாஹ்வின் மேல் ஆணையாக ஒருபோதும் நான் சாப்பிட மாட்டோம்' என்று (தம் குடும்பத்தினரை நோக்கிக்) கூறினார்கள்.
நாங்கள் உணவின் ஒவ்வொரு கவளத்தையும் எடுத்துச் சாப்பிடும்போது அதன் அடிப்புறத்திலிருந்து அதை விட அதிகமாக வளர்ந்து கொண்டே இருந்தது. அனைவரும் வயிறு நிரம்ப உண்டார்கள். அதற்கு முன்னிருந்ததை விட உணவு அதிகமாக இருந்தது. முன்பிருந்த அளவு அல்லது அதை விட அதிகமாக உணவு இருப்பதைக் கண்ட அபூ பக்ரு(ரலி) 'பனூ ஃபிராஸ் சகோதரியே! இது என்ன?' என்று (தம் மனைவியிடம்) வினவினார்கள். அதற்கவர் 'என் கண் குளிர்ச்சியின் மேல் ஆணை! இதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பிருந்ததை விட மூன்று மடங்கு இப்போது அதிகமாக உணவு உள்ளது என்றார். பிறகு அபூ பக்ரும் சாப்பிட்டார்கள். சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்தது ஷைத்தானிடமிருந்து ஏற்பட்டுவிட்டது ஒரு கவளத்தை எடுத்து உண்டார்கள். பின்பு நபி(ஸல்) அவர்களிடம் எஞ்சிய உணவை எடுத்துச் சென்றார்கள். காலை வரை அது அங்கேயே இருந்தது.  (புகாரி:602)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஹஜ் செய்தார்கள். நாங்கள் இஷாவின் பாங்கு கூறப்படும் நேரத்திலோ, அதற்குச் சற்று முன்னரோ முஸ்தலிஃபாவிற்கு வந்தோம். இப்னு மஸ்வூத்(ரலி), ஒருவரை பாங்கும் இகாமத்தும் கூறுமாறு கட்டளையிட, அவர் பாங்கும் இகாமத்தும் கூறினார். பின்னர் இப்னு மஸ்வூத்(ரலி) மக்ரிப் தொழுதுவிட்டு அதன்பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரவு உணவைக் கொண்டு வரச் செய்து உண்டார்கள். (புகாரி :1675)

10. இஷா தொழுகைக்குப்பின் உறக்கம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷா தொழுகைக்குமுன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப்பின் (உறங்காமல்) பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்ப வர்களாக இருந்தார்கள் ((புகாரி : 568)

No comments:

Social Media Encourages the Dayyooth – An Islamic Perspective

  Scholars have said ‘خير فيمن لا غيرة له لا’, ‘There is no good in a person who has no protective jealousy and honour’ [Kitab al Kaba’ir]. ...