بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) என்ற ஸஹாபி இயற்கையிலேயே குரலை நபி(ஸல்) முன்னிலையில் உயர்திப் பேசுபவர். அவர்கள் அன்சாரிகளின் பேச்சாளராக இருந்தார்கள்.
அல்லாஹுத் தஆலா 49:2 வசணத்தை இறக்கினான்.
விசுவாசிகளே! நபியினுடைய சப்தத்திற்கு மேல் உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள், மேலும், உங்களில் சிலர் மற்ற சிலருடன் உரக்கப் பேசுவதைப் போல், அவரிடம் பேசுவதில் (சப்தத்தை உயர்த்தி) நீங்கள் உரக்கப் பேசாதீர்கள், (ஏனெனில், இதனை) நீங்கள் உணர்ந்துக்கொள்ள முடியாத நிலையில் உங்களுடைய (நன்மையான) செயல்கள் அழிந்துவிடும். (49:2)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(49:2ஆவது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின்
கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர்,
‘‘அவரைக் குறித்த செய்தியைத் தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன்,
அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார்.
அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தமது வீட்டில்
அமர்ந்துகொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி)
அவர்களிடம், ‘‘உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்.
அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘(எனது நிலை) மோசம்தான். நான் நபி (ஸல்)
அவர்களின் குரலுக்குமேல் எனது குரலை உயர்த்தி(ப் பேசி)வந்தேன். என்
(நற்)செயல்கள் அழிந்துவிட்டன; நான் நரகவாசிகளில் ஒருவன்தான்” என்று
கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,
‘‘ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார்” என்று தெரிவித்தார்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடமிருந்து,) மகத்தான நற்செய்தியை வாங்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை
சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் சென்று
‘நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே’ என்று
சொல்!” என்று கூறினார்கள்
(ஸஹீஹுல் புகாரி: 4846, 3613,ஸஹீஹ் முஸ்லிம்: 187)