(நபியே!) “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியிருக்கும் (சகலவித) அலங்காரத்தையும், உணவு வகைகளில் நல்லவற்றையும் (ஆகாதவையென்று) தடுத்தவர் யார்? என்று கேட்பீராக! அது இவ்வுலக வாழ்வில் விசுவாசம் கொண்டவர்களுக்கு (உரியதாகும். எனினும்,) மறுமை நாளில் (மற்றவர்களுக்கன்றி அவர்களுக்கு மட்டுமே) பிரத்தியேகமானதாகும், என்று கூறுவீராக! அறியக்கூடிய சமூகத்தார்க்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.(7:32)
إِنَّ اللَّهَ يُحِبَّ أَنْ يُرَى أَثَرُ نِعْمَتِهِ عَلَى عَبْدِهِ
ஆல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் தன் அடியானிடம் தான் வழங்கிய செல்வம்(மூடிமறைக்கப்படாமல்) வெளிப்படுத்துவதை காண்பதற்கு விரும்புகின்றான்" . இதை அம்ர் இப்ன் ஷுயைப்(ரஹ்) அவர்கள் தம் தந்தை(ஷுயைப் இப்ன் முஹம்மத்) அவர்கள் வ்ழியாக தம் பாட்டானார்(அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள். (திர்மிதி: 2740)
ஸஹீஹுல் புகாரி - பாடம்: 44 பொன் பித்தான் பொருத்தப்பட்ட ஆடை
5862. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘என் அன்பு மகனே! நபி (ஸல்) அவர்களிடம் மேலங்கிகள் சில வந்திருப்பதாகவும் அவற்றை அவர்கள் (மக்களிடையே) பங்கிட்டுக்கொண்டி ருப்பதாகவும் எனக்குச் செய்தி எட்டி யுள்ளது. ஆகவே, எம்மை அவர்களிடம் அழைத்துச் செல்” என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் சென்று நபி (ஸல்) அவர்களை, அவர்களின் வீட்டில் கண்டோம். அப்போது என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘என் அருமை மகனே! எனக்காக நபி (ஸல்) அவர்களைக் கூப்பிடு” என்று சொன்னார்கள்.அதை மரியாதைக் குறைவாகக் கருதிய நான், ‘‘உங்களுக்காக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கூப்பிடுவதா?” என்று கேட்டேன்.அதற்கு அவர்கள், ‘‘என் அன்பு மகனே! (நபி -ஸல்) அவர்கள் சர்வாதிகாரி அல்லர்” என்று சொல்ல, நான் நபி (ஸல்) அவர்களைக் கூப்பிட்டேன். அப்போது அவர்கள் பொன் பித்தான் பொருத்தப்பட்ட அலங்காரப் பட்டு மேலங்கியொன்றை அணிந்துக் கொண்டுவந்து, ‘‘மக்ரமாவே! இதை உங்களுக்காக நான் எடுத்து வைத்தேன்” என்று சொல்லி மக்ரமாவிடம் அதைக் கொடுத்தார்கள். (மற்றும் புகாரி 2599, 5800, முஸ்லிம் 1907, திர்மிதி: 2739)
குறைந்த அளவுள்ள பட்டு வேலைபாடு உள்ளதை அணியலாம்
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையும் அதாஉ (ரஹ்)
அவர்களின் பிள்ளைக்குத் தாய்மாமாவுமான அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:அஸ்மா (ரலி) அவர்கள் என்னை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம்
அனுப்பி, "ஆடைகளில் (சிறிது) பட்டு வேலைப்பாடுகள் உள்ளதையும், சிவப்பு நிற
மென்பட்டுத் திண்டுகளை(ப் பயன்படுத்துவதை)யும், ரஜப் மாதம் முழுவதும்
நோன்பு நோற்பதையும், தாங்கள் தடை செய்துவருவதாக எனக்குச் செய்தி
எட்டியுள்ளதே (அது உண்மையா?)" என்று கேட்கச் சொன்னார்கள்.
ஆடைகளில் பட்டு வேலைப்பாடுகள் உள்ளதைப் பொறுத்தவரையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் "(மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்தாம் (இம்மையில்) பட்டாடை அணிவார்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். பட்டு வேலைப்பாடுகள் உள்ளதும் இத்தடைக்குள் அடங்கும் என்று நான் அஞ்சினேன்.
சிவப்பு நிறத்தில் அமைந்த மென்பட்டுத் திண்டைப் பொறுத்தவரையில், இதுதான் அப்துல்லாஹ் பின் உமரின் திண்டாகும். இதுவும் சிவப்பு நிறத்தில் அமைந்த திண்டுதான்" என்று கூறினார்கள்.
நான் அஸ்மா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து, இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதைத் தெரிவித்தேன். அப்போது அஸ்மா (ரலி) அவர்கள், "இதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நீளங்கியாகும்" எனக் கூறி, கோடுபோட்ட பாரசீக (மன்னர்கள் அணியும்) பட்டு நீளங்கி ஒன்றை வெளியே எடுத்தார்கள். அதன் கழுத்துப் பகுதியில் அலங்காரப் பட்டு வேலைப்பாடு இருந்தது. அதன் முன், பின் திறப்புகள் அலங்காரப் பட்டினால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அஸ்மா (ரலி) அவர்கள், "இது, ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்கள் இறக்கும்வரை இருந்துவந்தது. அவர்கள் இறந்த பின்னர் அதை நான் எடுத்துவைத்துக்கொண்டேன். இதை நபி (ஸல்) அவர்கள் அணிந்துவந்தார்கள். பின்னர் நாங்கள் (அருள்வளம் கருதி) இதைத் தண்ணீரில் கழுவி, அதைக்கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவருகிறோம்" என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 4201)
சுவைத் பின் ஃகஃபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (டமாஸ்கஸிலுள்ள) "ஜாபியா"
எனுமிடத்தில் உரை நிகழ்த்துகையில், "நபி (ஸல்) அவர்கள் பட்டு அணிவதைத்
தடைசெய்தார்கள்; இரு விரல்கள் அல்லது மூன்று விரல்கள் அல்லது நான்கு
விரல்கள் வைக்குமிடத்தின் அளவைத் தவிர" என்று குறிப்பிட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 4206)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பட்டாடைக்குத் தடை விதித்தார்கள்; இந்த அளவைத் தவிர: (அந்த அளவை விவரிக்கையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நடு விரலையும் ஆட்காட்டி விரலையும் உயர்த்தி, அவ்விரண்டையும் இணைத்துக் காட்டினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 4203)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமையில் இந்தப் பட்டாடையில் ஒரு சிறிது(ம் அணிகின்ற பாக்கிய)மற்றவரே இம்மையில் அதை அணிவார்; இந்த அளவைத் தவிர: -(அந்த அளவை விவரிக்கும் வகையில் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள்) பெருவிரலுக்கு அடுத்துள்ள இரு விரல்களால் சைகை செய்து காட்டினார்கள்.- அது கோடுபோட்ட கெட்டி ஆடைகளின் பித்தான்களின் அளவு என அந்த ஆடைகளைக் கண்டபோது கருதினேன். (ஸஹீஹ் முஸ்லிம் 4204)
அன்பளிபாக வந்த பட்டு நீளங்கியை விரைவாக கழற்றிவிட்டீர்கள் (முஸ்லிம் 4207, 4214)